இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும் திரைப்படம் விமர்சனம்

 இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும் திரைப்படம் விமர்சனம்

கதை : தென்மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் குன்னி முத்துவுக்கும் வீராயிக்கும் திருமண சீர்வரிசை சீதனமாக, வீராயியின் தந்தை, வெள்ளையன் கருப்பன் எனும் இரு காளை கன்று குட்டிகளை தருகிறார். அவர்களும் நான்கு வருடங்களாக தங்களுடைய பிள்ளைகள் போல் பாசம் காட்டி வளர்த்து வருகிறார்கள். எந்த தீவனமாக இருந்தாலும் அவர்கள் கைகளால் தந்தால் மட்டுமே சாப்பிடும் இல்லை என்றால் இரு காளைகளும் பட்டினி கிடக்கும் அந்த அளவுக்கு அவர்கள் மீது பாசமாக இருக்கிறது. ஒருநாள் திடீரென இரு காளைகளும் காணாமல் போய்விடுகிறது. குன்னி முத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறான் அதை ஏற்க மறுத்துவிடுகிறார்கள். காளைகளை தேடித்தேடி திருட்டு பழி சுமந்து உதை வாங்கி கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் குன்னி முத்து. அப்போது அந்த ஊருக்கு தகவல் சேகரிக்க வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவன பெண் நிருபர் வாணி போஜன், குன்னிமுத்து காளைகள் காணாமல் போனதை கவர் ஸ்டோரியாக மாற்றி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். காளைகள் காணாமல் போகவில்லை அமைச்சரின் உதவியாளர்களால் திருடப்பட்ட விஷயத்தை அம்பலப்படுத்துகிறார். தனியார் தொலைக்காட்சி பெண் நிருபர் உதவியின் மூலம் தங்களின் காளைகளை திரும்பப் பெற்றார்களா இல்லை அமைச்சரால் ஏமாற்றப்பட்டார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.

திரைக்கதையில் இயக்குனர் அரிசில் மூர்த்தி நடப்பு அரசியல் நிகழ்வுகளை நையாண்டி தனமாக சேர்த்து, மக்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஏமாற்றவில்லை. அவர்கள் தங்களின் உரிமைகளை சட்டப்படி பெறுவது எப்படி என்பதை இன்னும் தெரிந்து கொள்ளாமல் ஏமாந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வந்த கருத்தை நேர்த்தியுடன் பதிவு செய்கிறார். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், மின்சாரம், சாலை வசதி, ரேஷன் கடை இப்படி அனைத்தையும் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து சட்டப்படி பெறலாம் என்பதை ரசிக்கும் வண்ணம் திரையில் காட்சி அமைத்து ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறார் இயக்குனர் அரிசில் மூர்த்தி. விருதுகளையும் பெறுவார்.

இந்த படத்தில் வரும்
ரம்யா பாண்டியன், வாணிபோஜன்,மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் இவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நிஜ கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் நம் மனங்களையும் ஆக்கிரமிக்கிறார்கள். இது தவிர இப்படத்தில் வரும் ஏனாதி காவல்நிலைய ஏட்டு, குளத்தை தூர்வாரும் பெரியவர், குனியமுத்தூர் பாட்டி, வைத்தியர், பூஜாரி, பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறுமி இப்படி இப்படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் கிறிஸ் இசையும் காட்சியின் உணர்வை அழுத்தமாக நம் மனதிற்குள் கடத்தி நம்மையும் மெய்மறந்து ரசிக்க வைக்கிறது. படத்தின் முதல் பாதியில் நம்மை பூஞ்சேரி கிராமத்தில் பயணிக்க வைத்தது இரண்டாம் பாதியில் சொல்ல வந்த விஷயத்தை மிகவும் நேர்த்தியுடன் எடிட் செய்து சபாஷ் பெறுகிறார் இந்த படத்தின் எடிட்டர் சிவ சரவணன்.

இது போன்ற தரமான படைப்புகளை தொடர்ந்து 2D நிறுவனம் சார்பில் ஜோதிகாவும் சூர்யாவும் தயாரிக்க வேண்டும். அவர்களுக்கு ரசிகர்களின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Related post