உரியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.

 உரியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.
தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.  குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உரியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி  க்ளைமேக்ஸ்  சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.

இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உரியடி படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, இயக்குனர் சிவா சார் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. சிவா சாரை சந்தித்தபோது வீரம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அமைத்து தரும்படி கேட்டார். இரண்டாவதே அஜித் சார் படம் என்றவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. உடனே ஓகே சொல்லி மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றேன்.

அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார். அமராவதி படத்தில் இருந்த அதே அஜித் தான் தற்போதும். என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

வீரம் படத்தை அடுத்து, உரியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவண், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன்.

தற்போது சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரைப்போற்று  படத்தில் சண்டைக்காட்சிகள் அமைத்து இருக்கிறேன். இப்படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அமைப்பது குறித்து விக்கி மேலும் கூறும்போது, நான் ஒவ்வோரு சண்டைக்காட்சி யையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.

சண்டை இயக்குனர் விக்கி தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற பல மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Related post