சாஹோ விமர்சனம்

 சாஹோ விமர்சனம்

கரு – போலீஸ் திருடன் ஆடு புலி ஆட்டத்தில் போலீஸ், திருடன் பக்கமாக மாறும் ஹீரோவின் சாகசம்தான் கரு.

கதை – உலக தாதாக்களின் தலைவர் மும்பை பயணத்தில் சாகடிக்கப்படுகிறார். உலக தாதாக்களின் கூட்டத்தில் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படுகிறது. தாதாவின் மகன் வருகிறார். அவரிடம் குவிந்திருக்கும் பண அறையைத் திறக்கும் பிளாக் பாக்ஸை வில்லன் குறி வைக்கிறார். இன்னொரு புறம் புத்திசாலி திருடன் ஒருவன் தொடர் கொள்ளைகளில் ஈடுபட, அவனைப் பிடிக்க அண்டர்கவர் போலீஸ் அதிகாரி ஒருவர் வருகிறார்.

திருடன் உலக தாதாக்களுக்குத் தேவைப்படும் பிளாக் பாக்ஸ் பக்கம் திரும்ப, அங்கே ஆரம்பிக்கிறது ஆடு புலி ஆட்டம். யார் போலீஸ் யார் திருடன் என்பதெல்லாம் மாறி அனைவரும் அந்தப் பணப் புதையலை நோக்கி ஓடுகிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள், தாதாவின் இடத்தை யார் அடைகிறார்கள், போலீஸ் அதிகாரி அந்தத் திருடனைப் பிடித்தாரா என்பதே கதை.

விமர்சனம் – தெலுங்குப் படங்களுக்கென்றே ஒரு வரையறை இருக்கிறது. கலர் சட்டைகளில் மினுக்கும் ஹீரோ, கவர்ச்சியில் உச்சம் தொடும் ஹீரோயின், தவறாமல் ஒரு அயிட்டம் பாடல், சத்தம் போடும் கொடூர வில்லன், பஞ்ச் பேசிக் கைகளாலேயே ஆட்களைப் பறக்கவிடும் ஹீரோ. இது முன்னணி ஹீரோக்களின் படங்களின் மாறாத அம்சம். கடந்த சில வருடங்களில் தெலுங்குப் படங்கள் கதை சொல்லலில் நிறைய மாற்றங்களை அடைந்துவிட்டாலும் இன்னும் பழைய ஃபார்முலா மாறாத படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பழைய ஃபார்முலாவில் ஹாலிவுட் ஆக்ஷன் மசாலாவைச் சேர்த்துப் பரிமாற முயன்றிருக்கிறது சாஹோ.

பாகுபலிக்குப் பிறகு கிடைத்த மிகப் பெரும் பிராபல்யத்தின் ஒளிவட்டத்தோடு, பிரம்மாண்டமான தயாரிப்பில் வந்திருக்கிறார் பிரபாஸ். ஆனால், காட்சிக்குக் காட்சி திரையில் தெரியும் பிரம்மாண்டம் கதையில் இல்லை.

Related post