சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

 சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

கரு – உறவுகளுக்கிடையே ஏற்படும் முன்பகை, மனங்களை காயப்படுத்துவதும் அது மாறுவதும் தான் கரு.

கதை – ஜீவி, லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார்.

மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே கதை.

விமர்சனம்: பிச்சைக்காரன் எனும் மெகா வெற்றிக்குப் பிறகு சசி தன் அடுத்த படைப்புடன் வந்திருக்கிறார். கமர்ஷியல் படமே என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் காலமும் சிரத்தையும் அவர் படத்தை தனித்துக் காட்டும். இது இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும் அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதை சொல்லியிருக்கிறது.

ஒரு பக்கம் பைக் ரேஸ் இளைஞன், இன்னொரு புறம் நேர்மையான போக்குவரத்து அதிகாரி, இருவரின் வாழ்க்கையின் வழியே மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். சசி படங்களில் மனித உணர்வுகள்தான் மையமாக இருக்கும். அதுதான் காதாபாத்திரங்களின் பிரச்சினையாகவும் இருக்கும் அவர் திரைக்கதையும் எதிர்பார்த்த காட்சிகளின் வழியே உணர்ச்சிவயப்படும்படி இருக்கும்.

இந்தப் படத்திலும் அது சரியாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கும்படியான கதைகளே இல்லாத தமிழ் சினிமாவில் சரியான நேரத்தில் வந்திருக்கிறது இப்படம். இக்கால இளைஞனின் அவசர வாழ்வைச் சொல்லும் வழியில் நாம் உணர வேண்டிய உறவின் மதிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறார். உறவில் ஏற்படும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிரச்சினைகளும் வெகு அழகாகத் திரைக்கதையில் வருகின்றன.

சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாகத் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜீவியுடன் மல்லுக்கட்டுவது, பின் குடும்பத்திற்காக இறங்கி வருவது என அசத்துகிறார். ஜீவி இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு. அக்காவுக்காக அழும் இடத்தில் கவர்கிறார். லிஜோ மோல் ஜோஸ் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரம்.

இருவருக்குமான பாலமாக இருக்கிறார். அன்பு, பிரிவு,வலி என அனைத்தையும் கண்களின் வழியே கடத்துகிறார். நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். காஷ்மிரா இன்னொரு ஹிரோயின் தமிழ் சினிமா ஹீரோயினின் மாறாத பாத்திரப் படைப்பில் வந்து போகிறார்.

ஆண்கள் ஆடையை அணியப் பெண்கள் சங்கடப்படுவதில்லை, ஆனால் பெண்ணின் ஆடை ஏன் ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது, ஒரு நாட்டின் நிலமை தெரிய வீட்டைப் பார்க்க வேண்டாம், ரோட்டை பார்த்தால் போதும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். இசை படத்திற்கு மற்றுமொரு பலம். எடிட்டிங்கில் கிளைமாஸ் நீளத்தை குறைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ஓகே.

பைக் ரேஸ் காட்சிகளில் சிஜி அப்பட்டமாகத் தெரிகிறது. படம் சொல்லிவந்த கதையை க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வைத்து சொதப்பியிருக்கிறார்கள். அத்தனை நீளமான சண்டைக் காட்சி அவசியம்தானா?. சின்ன சின்ன உறவுச் சண்டைகளும், கூடலும் அழகாய் இருக்கும்போது சினிமாத்தனமான வில்லனும் அந்த மசலாத்தனமும் தேவைதானா?

சசியின் ஒவ்வொரு படமும் தனித்துத் தெரியும். இப்படம் குடும்ப உறவைச் சொன்னதைத் தவிர சசியின் முத்திரைகள் பெரும்பாலும் படத்தில் மிஸ்ஸிங். இரு சிறுவர்கள் எப்படி ஒரு வீட்டில் வாழ முடியும் என ஆரம்பமே லாஜிக் கேள்வி எழுவது மைனஸ். தம்பிக்குக் கடைசிவரை அக்காவின் கர்ப்பம் தெரியாது எனபது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் சசி படத்தில் இருப்பது ஆச்சரியம்.

படம் முழுக்க இப்படிச் சிறு சிறு குறைகள் எட்டிப்பார்த்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் நல்ல கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை.

பலம்: குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை , நடிகர்கள்

பலவீனம்: லாஜிக், க்ளைமாக்ஸ் நீளம்.

மொத்தத்தில்: குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கமர்ஷியல் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

Related post