பயில்வான் விமர்சனம்

 பயில்வான் விமர்சனம்

கரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு.

கதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் சுனில்.

குஸ்தியை விட்டு ஒதுங்கும் அவனை குஸ்தி தேடி வருகிறது. மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்புகிறான். அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பாக்ஸிங்கில் பங்கேற்று ஆணவமிக்க பாக்ஸரை தோற்கடிப்பதே கதை.

விமர்சனம்: கதையாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் படமாகப் பார்க்கும்போது பல இடங்களில் சொதப்புகிறது. ஸ்லோமோஷனில் ஹீரோ அறிமுகக் காட்சி, அடுத்து பெரியவருக்கு, அடுத்து ஹீரோயினுக்கு, அடுத்து வில்லன் என இந்த ஸ்லோமோஷன் டார்ச்சர் நீண்டு கொண்டே போகிறது.

குஸ்தி வீரன், காதல், பெரியவரைப் பிரிவது, வில்லன் மிரட்டுவது, மீண்டும் சேர்வது, கிளைமேக்ஸ் ஃபைட் என பலமுறை நாம் பார்த்த டெம்ப்ளேட்டை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே ஃபார்மேட்! படத்தில் காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் எல்லாம் இருக்கின்றது. ஆனால் எல்லாமே பழங்கஞ்சி!

கே.ஜி.எஃப். படத்திற்குப் பிறகு கன்னடப் படத்திற்கு தேசிய அளவில் வியாபாரம் பிடிக்க எண்ணி எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள படம் இது. டப்பிங் படம் பார்க்கும் எண்ணம் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. அதுவும் கிச்சா சுதீப்பின் வாய்ஸ் சகிக்கவில்லை. படம் எந்த காலகட்டத்தில் எந்த இடத்தில் நடக்கிறது என்பதே புரியவில்லை. ஒரு புறம் ராஜ வம்சம், குஸ்தி, இன்னொரு புறம் மாடர்ன் காதலி, பாக்ஸிங் என எந்த லாஜிக்கும் இல்லை.

சுதீப் வலுவாக உடலை ஏற்றி குஸ்தி வீரன் போல் மாறியிருக்கிறார். குஸ்தி சண்டைக் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகான்ஷா சிங் டப்பிங் சீரியலில் வந்த முகம். ஹீரோயினாக வருகிறார். இரண்டு பாடல், ஒரு ரொமான்ஸ் சீன், ஒரு சென்டிமென்ட் சீனுடன் அவரது கோட்டா முடிந்து போகிறது. சுனில் ஷெட்டி கம்பீரமாக இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம்.

அரதப்பழசான கதை மேக்கிங்கிலும் பெரிதாகக் கவரவில்லை. இடைவேளைக்குப் பிறகு திடீரென கதை தடம் மாறுகிறது. திணிக்கப்பட்ட கிளைமேக்ஸ் உறுத்துகிறது. நிறைய பொறுமை இருந்தால் ஆங்காங்கே சில தருணங்களை ரசிக்கலாம். இசை, சண்டைக் காட்சிகளில் மட்டும் ஓகே. ஒளிப்பதிவு படத்தைத் தாங்குகிறது. வசனங்கள் பலவும் வாட்ஸப் பொன்மொழிகள். பயில்வான் பலமுறை நாம் பார்த்தவன் தான்.

பலம்: சுதீப், சண்டைக் காட்சிகள்

பலவீனம்: திரைக்கதை, லாஜிக் ஓட்டைகள்

மொத்தத்தில்: சண்டைக் காட்சிகளை ரசிப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம். பயில்வான் திரைக்கதையில் ஒல்லிப்பச்சான்.

Related post