” பற ” என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

 ” பற ” என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற கோசம். நம் தமிழ்சினிமாவில் சமூகநீதி பேசும் படங்கள் தற்போது அதிகமாக வரத்துவங்கியுள்ள நிலையில் ஒடுக்குமுறைகளை கேள்விகேட்டும், உளவியல் ரீதியான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதமாகவும், மேலும் விடுதலைக்கான விடியலை வேண்டியும் பற எனும் அட்டகாசமான படம் தயாராகி இருக்கிறது.

லெமுரியா மூவிஸ், V5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ்பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு s.p. முகில்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையில் சினேகன் எழுதிய உன்பேரை எழுதி வச்சேன் என்ற பாடல் யூட்யூபில் 15 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தும் கடந்தும் சாதனைப் புரிந்து வருகிறது.

இப்படம் பற்றி இயக்குநர் கீரா பேசும்போது,

“நம் சமூகத்தில் ஆணவக்கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் பற படம் வெளிவருவது மிகத் தேவையான ஒன்றாக இருக்கும். ஆணவக்கொலையை மிக காத்திரமாக எதிர்க்கும் படமாக இது இருக்கும். இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள். அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன. இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் பற என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல. பற என்றால் பறத்தல். அது விடுதலையின் குறியீடு. ஓரே இரவில் நடக்கும் கதைதான் படம். படம் நெடுக சீரியசாக விசயங்கள் மட்டும் இருக்காது. இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும் விதமாகவே செய்திருக்கிறோம்.

படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரை அம்பேத்கர் கேரக்டர் வெளிப்படுத்தும் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. வடசென்னை ப்ளாட்பார வாசியாக நித்திஷ் வீரா நடித்துள்ளார்.அவரையே நம்பி நாம் வாழும் மண்ணில் நமக்கு ஒருதுண்டு நிலம் கிடைத்து விடாதா என்று ஏங்கி வாழும் கதாபாத்திரம் சாவந்திகாவிற்கு. பார் டான்சராக அஷ்மிதா தோன்றுகிறார். கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூமோன் நடித்துள்ளனர். சின்னச் சின்னத்திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளார். நடிகர் முத்துராமன் ‘பழுத்த’ அரசியல் வாதியாக நடித்துள்ளார். படத்தில் அவர் பெயர் ஆண்டவர்.

இவர்களின் கதைகள் தனித்தனியே வந்து மொத்தமாய் ஒரு புள்ளியில் இணைவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் வீரியமிக்கவையாக இருக்கும் என்று நம்புகிறோம். ஒரே இரவில் நடக்கும் கதை இது. இரவில் நடக்கும் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு விடியலைத் தேடுவார்கள். அந்த விடியல் கிடைத்ததா என்பது உங்கள் முன் காட்சிகளாக விரியும் போது நிச்சயம் நாங்கள் கவனிக்கப்படுவோம் என்று நம்புகிறோம்.” என்றார்

டிசம்பரில் வெளியாவுள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் கீரா. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர். சிபின்சிவன் ஒளிப்பதிவை கவனிக்க ஷாபஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். ஆர்ட் டைரக்டராக ராகுல் பணியாற்றியுள்ளார். தரமாக தயாராகியுள்ள பற உயரப்பறக்கும் என்பது படக்குழுவினரின் கான்பிடன்ட். இம்மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related post