பேய் மாமா – திரைப்பட விமர்சனம்
சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் யோகிபாபு ஒரு கட்டத்தில் பேய் ஓட்டுகிறவர் எனப் பொய் சொல்லி ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறார். அங்கு பேய்களிடம் மாட்டிக் கொள்ளும் அவரும் அவருடைய குழுவினரும் எப்படித் தப்பிக்கிறார்கள்? அந்தப் பேய்கள் பேய்களானது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைதரும் படம் பேய்மாமா.
யோகிபாபு ஏற்கெனவே பல படங்களில் செய்த வேடம். அலட்சியமாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.அவருக்கு ஜோடி என்று முழுமையாகச் சொல்லமுடியாவிட்டாலும் கூடவே வருகிறார் மாளவிகா மேனன்.உருட்டி மிரட்டும் விழிகள் அவருக்குப் பலம்.
எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமானோர் படத்தில் இருக்கின்றனர்.
எல்லோரும் சிரிப்பு நடிகர்கள் என்றாலும் எல்லோரும் சிரிக்க வைக்கவில்லை.
படத்துக்கு ஒளிப்பதிவு எம்.வி.பன்னீர்செல்வம். பட்டுமலை பங்களா காட்சிகளைப் பறவைப்பார்வையில் காட்டியிருப்பது அழகு.
ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் சுமார். பின்னனி இசையில் குறைவில்லை.
சண்டைப்பயிற்சியை தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் ஆகியோர் அமைத்துள்ளனர். யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சண்டைப்பயிற்சிக்கு என்ன வேலை? என்கிற கேள்வி எழலாம். ஆனால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி அதிரடியாக ஒரு சண்டைக்காட்சியை அமைத்திருக்கிறார்கள். யோகிபாபுவும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
ஏற்கெனவே வெளியான பல படங்களின் காட்சிகளை நகைச்சுவையாக மறு ஆக்கம் செய்வது,புகழ்பெற்ற தொலைக்காட்சி விளம்பரங்களைக் கேலி செய்வது என்று பல வகைகளில் சிரிப்புக்காட்சிகள் அமைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஷக்திசிதம்பரம்.
அவற்றோடு கொடிய வைரஸை உற்பத்தி செய்து பரப்பும் வில்லன் கூட்டம், அதற்கெதிராகப் போராடும் பாரம்பரிய வைத்தியர்கள் என தற்காலத்துக்கு மிகப்பொருத்தமான விசயம் படத்தில் இருக்கிறது.
யோகிபாபு காப்பாற்றுகிறார்.