மகாமுனி விமர்சனம்

 மகாமுனி விமர்சனம்

கரு: நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் நம் சந்ததியையே சேரும். நாம் நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நல்லதா, கெட்டதா என்கிற கேள்விதான் இப்படத்தின் கரு.

கதை: சென்னையில் அரசியல் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத்தரும் மகா, தன் மனைவி மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்காக கொலை செய்யும் வேலைகளிலிருந்து விடுபட முயல்கிறான். ஆனால் விதி ஒரு கொலை வழக்கில் அவனை மாட்டிவிடுகிறது. இன்னொரு புறம் ஈரோட்டில் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த முனி, விவேகானந்தரைப் போற்றி, அவர் வழியில் வாழ முற்படுகிறான்.

ஒடுக்கட்ட சாதியைச் சேர்ந்த அவனுக்கு இயல்பாக ஒரு நட்பு கிடைக்கிறது. சாதி சார்ந்த வன்மம் கொண்ட மனிதர்களால் அவன் உயிருக்கு ஆபத்து வருகிறது. முன் வினையும் வாழும் முறையும் இந்த இருவரையும் எப்படி பாதிக்கிறது, அவர்களை வாழவிடாமல் செய்யும் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா, அவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு, இதன் முடிவென்ன என்பதே கதை.

விமர்சனம்: தியாகராஜன் குமாராஜா போல் 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கும் இயக்குநரின் படம். சாந்தகுமார் உருவாக்கிய ‘மௌன குரு’ அவரை இன்னும் நினைவில் மங்காமல் வைத்திருப்பதே இப்படத்திற்குப் பெரும் அடையாளம். எளிய மனிதர்களுக்கு நடக்கும் மிக எளிய சம்பவங்களைத் திரைக்கதை மொழியில் பார்வையாளர்களின் அனுபவமாக மாற்றும் திறமை அவருக்கு இருக்கிறது. இப்படத்திலும் அது வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமா துவைத்து காயப்போட்ட இரட்டைப் பாத்திரங்கள் கொண்ட கதையை மிக அழுத்தமான நுண்விவரங்களோடும் சமூகப் பார்வையோடும் வலுவான பாத்திரங்களின் வழியாகச் சொல்லியிருக்கிறார். நம்மை உட்கார்த்தி வைத்து சுவாரஸ்யம் குறையாமல் கதை சொல்வது ஒரு கதைசொல்லிக்கு முக்கியம். அந்த அதிசயம் இதில் அரங்கேறியிருக்கிறது. நொடிக்கு நொடி அடுத்தது என்ன எனக் கேட்கும் அதே வேளையில் நம்முள் உணர்வுகளையும் அள்ளி குவிக்கிறது.

இரண்டு நாயகர்களின் கதைகளில் ஒன்று அரசியலின் அதிகார வர்க்கம் இயங்குவதையும், அது பாதிக்கும் மனிதர்களையும் சொல்கிறது. மற்றொன்று பகுத்தறிவு வளர்ந்துவிட்ட பொழுதிலும் சிக்குப் பிடித்த சாதி மனநிலையில் பாதிக்கப்படும் மனிதனின் கதையையும் சொல்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் அபாரமான திரைக்கதை தான் இதன் சிறப்பு. நாம் தினமும் செய்திகளில் வாசிக்கும் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் மனிதர்களை நிஜமாய் உலவிட்டிருக்கிறார்கள்.

எளிமையான வாழ்க்கை வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரையும் அவன் செய்யும் நல்லதும் கெட்டதும் பாதிக்கும் என்பதை அழகாய், அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள். பசி போல் எதுவும் கற்றுத்தாராது, சச்சின் ஆக முயற்சித்தால் ஆகலாம். ஆனால் சச்சினுக்கு பூஜை செய்தால் அப்படி ஆகிவிட முடியாது என கடவுளுக்கு விளக்கம் தருவது மனதைத் தொடுகிறது. வீரம் என்பது நேர்மையாய் இருப்பது; பாசாங்கு செய்வதல்ல என்பது போன்ற வசனங்கள் கூர் ஈட்டியாய் இறங்குகின்றன.

திரையில் காட்டப்படும் அத்தனைக்கும் லாஜிக் சொல்லப்படுபடுவதில் திரைக்கதை மிளிர்கிறது. அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைக் கூட்டிச்செல்லும் விதமும் அழகு. இசை மயானத்தையும் கருவறையையும் இணைக்கும் புள்ளியாய் இயங்கியிருக்கிறது. தமன்னுக்குள் இத்தனை திறமையா என ஆச்சரியமூட்டுகிறது. காட்சிகளின் எளிமையை இசை அசாதாரணமாக்கிவிடுகிறது. எடிட்டிங் கச்சிதம். ஒளிப்பதிவு பல இடங்களில் காட்சியின் தன்மையை கூட்டியுள்ளது. ஆரம்ப காட்சி இறுதிக்காட்சி என படத்தின் பல ஷாட்கள் அபாரம். இறுதி ஷாட் மட்டுமே தனியே ஒரு பெருங்கதையை நாவல் போல் சொல்கிறது.

படத்தில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் தங்கள் முத்திரையை அழுத்தமாய் பதிந்திருக்கிறார்கள். நான் கடவுளுக்கு பிறகு ஆர்யாவுக்கு சவாலான படம். அவர் திரைவாழ்வில் மறுக்க முடியாத படமகவும் ஆகியிருக்கிறது. மகாவாகவும் முனியாகவும் இரு வேறு பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார். மகாவாக அவர் கண்கள் நடிப்பின் உச்சம் தொட்டிருக்கின்றன. இந்துஜா மத்தியதர மனைவி கொஞ்சம் துருத்தினாலும், இறுதிக் காட்சிகளில் அழ வைக்கிறார். தனக்கு இப்படியும் நடிக்கத் தெரியுமெனக் காட்டியிருக்கிறார். இளவரசு, ரோகிணி என அனைவரும் ஈர்க்கிறார்கள்.

பல அடுக்குகளாய் படம் மிரட்டினாலும் எல்லாமே மிகவும் அடர்த்தியாய் இருப்பது கொஞ்சம் நெருடல். இறுதிக் காட்சிகள் படத்தை கொஞ்சம் சினிமாத்தனமாக மாற்றிவிடுவது மைனஸ். காட்சிகளில் எளிதாய் சொல்லிவிடும் பலமுள்ள இயக்குநர் இறுதியில் வாய்ஸ் ஒவரில் கதை பேசுவது ஏனோ? படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருப்பதும் கொஞ்சம் மைனஸ். வசனங்கள் அழுத்தமாய் இருந்தாலும் இயல்பைத் தாண்டி இருப்பதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
எல்லாம் தாண்டி ஓர் பேரனுபவமாய் ஈர்த்ததில் ஜெயித்திருக்கிறது மகாமுனி.

பலம்: திரைக்கதை, நடிகர்கள், இசை

பலவீனம்: படத்தின் நீளம்.

மொத்தத்தில்: மகாமுனி, தமிழில் அரிதான முயற்சிகளில் ஒன்று. ஒரு கதையைத் தெளிவான திரைக்க்தையுடன் அழகாகச் சொல்கிறது. மகாமுனி, வாழ்க்கைப் பாடம், புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு!

Related post