வாழ்த்திய அனைவருக்கும் நன்றி – நடிகர் யோகி பாபு
அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.
இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்தளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதும், பார்க்கும் போதும் இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
சமூக வலைதளத்தில் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அனைவருக்குமே நான் ‘நன்றி’ சொல்லியிருந்தால், அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்துக் கொண்டேன். ஆகையால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். இந்த அறிக்கையின் மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினருக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். கொரோனா அச்சுறுத்தலால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவிக்கிறார்கள். சினிமா தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள் தொடங்கி எத்தனையோ மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யுங்கள். நாம் செய்யும் ஒரு உதவி, பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் மாற்று உதவியாக நம்மை வந்தடையும்.
கொரோனா காலம் முடிவடைந்து அனைத்தும் விரைவில் சீராகும். நாம் அனைவரும் விரைவில் பழைய மாதிரி மாஸ்க் இல்லாமல் நண்பர்களுக்குள் கை கொடுத்து, கட்டிப் பிடித்து பழகுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அதற்கு எல்லாம் நான் வணங்கும் முருகன் அருள் புரிவார்.
என்றும் உங்கள் வீட்டில் ஒருவன்
யோகி பாபு