ஜாம்பி விமர்சனம்

 ஜாம்பி விமர்சனம்

கரு: ஆங்கிலம் பேசிய ஜாம்பியை, தமிழ்ப்படுத்தி காமெடியாக்கும் முயற்சி.

கதை: கோபி, சுதாகர் , பிஜிலி ரமேஷ் முதலான நண்பர்கள் தங்கள் பல்வேறு பிரச்சினைகளை மறப்பதற்க்காகக் குடித்துவிட்டு ரிசார்ட்டில் ரூம் எடுத்துத் தங்குகிறார்கள். யாஷிகா ஆனந்த் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாட அங்கு வருகிறார். பிஜிலியிடம் இருக்கும் தனது போனை மீட்க டான் ஆன யோகி பாபு அங்கு வருகிறார். ரிசார்ட்டில் பாரிமாறப்படும் கெட்டுப்போன சிக்கன் மூலம் எல்லோரும் ஜாம்பியாக மாற அங்கிருந்து இவர்கள் அனைவரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

விமர்சனம்: இம்மாதிரி கதைகள் ஹாலிவுட்டில் அதிகம். ஆனால் அப்படங்களில் தீவிரமான திரைக்கதை நம்மைக் கவரும். ஆனால் இதில் சொல்ல ஒன்றுமில்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும், அந்த நோக்கம் சரியாக நிறைவேற்றப்பட்டாலே ரசிகர்களுக்குத் திருப்தியான படம் கிடைத்துவிடும்.

ஜாம்பி படத்தில் அந்த நோக்கம் அவர்களுக்கே தெரியுமா எனத் தெரியவில்லை. படம் அத்தனை கொடூரமான அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களில் பல விதங்களில் வந்துவிட்ட ஜாம்பியை தமிழ்ப்படுதியிருக்கிறார்கள். புலியைப் பார்த்துப் பூனைக்குக் கோடு போட்டால் பரவாயில்லை. ஆனால், எலிக்கு பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி என என முடிவு செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம். மருந்துக்கும் நமக்கு சிரிப்பு வரவில்லை.

மிருதன் எனும் ஜாம்பி முயற்சி ஓரளவாவது தேறியது. இந்தப் படம் மொத்தத்தையும் குழி தோண்டி புதைக்கிறது. கோபி, சுதாகர் யுடியூபில் பரிதாபங்கள் மூலம் கலக்கியவர்கள். இப்படத்தில் நம்மைப் பரிதாபமாக்கியிருக்கிறார்கள். பிஜிலி ரமேஷ்க்கு பேட்ட தீம்; அதற்குப் பெயர் காமெடி!
யாஷிகா ஆனந்தின் பிரபல்யத்தைப் பயன்படுத்தையதை தவிரப் படத்தில் அவருக்கான முக்கியத்துவம் ஒன்றுமே இல்லை.

யோகி பாபு எங்காவது சிரிக்க வைத்துவிடுவார் எனக் காத்திருந்தால் படம் முடிந்து விடுகிறது. படத்தின் ஒரு காட்சியாவது சிரிப்பு வரும்படி எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்த்தால் ஒரு கோர அனுபவமாக மாறிவிடுகிறது. படத்தின் செட்களில் அப்பட்டமாய் பட்ஜெட் துருத்திக்கொண்டு தெரிவதில் ஆரம்பித்து, சிஜி, மேக்கப், ஜாம்பி ரத்தம் என அனைத்துமே சொதப்பல்.

இயக்குனர் புவன் நலன் சிரிக்கவைக்கக் கூடாது என கங்கணம் கட்டிய மாதிரி படமெடுத்திருக்கிறார். கதை, திரைக்கதையில் யூடியூப் வீடியோவில் இருக்கும் கவர்ச்சியில் ஒரு சிறிய பங்குகூட இல்லை. வித்தியாசமான காமெடி முயற்சி ஆனால் தெளிவற்ற, தேவையற்ற முயற்சி.

பலம்: எதுவும் இல்லை.

பலவீனம்: அனைத்தும்

மொத்தத்தில்: சிரிக்க நினைத்து ஒதுங்கினால், நாம் ஜாம்பியாகிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. ஜாம்பி கொஞ்மும் தேறாத முயற்சி!

Related post