திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி

 திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி

அண்ணாத்த திரைப்படத்தில் “வாசாமி” பாடல் மூலம் திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி. ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் நம்பர் கொடுத்துள்ளார். 

    இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி நம்மிடம் கூறும் போது, “வாசாமி” பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம்  சிறு தெய்வங்களுக்கு தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவு கூறும் வகையிலும், வேட்டைக்கு செல்லும் குலசாமியின் பெருமை சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன். 

    நொச்சிபட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் போன்ற மாற்றுத் திறனாளிகளை இந்தப் பாடல் மூலம் அறிமுகம் செய்து இசையமைப்பாளர் இமான் மக்கள் மனதில் பெரும் உயரத்திற்கு சென்றுவிட்டார். இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த வாசாமி பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். 

  மண்வாசத்தோடு கூடிய இந்தப் பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று கூறினார். 

    மேலும் அருண்பாரதி தற்போது பிச்சைக்காரன்- 2, காக்கி, கடமையை செய், கார்பன், நா நா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருவதோடு, விரைவில் உரைநடையில் எழுதி வரும் தன் புத்தகங்கள் வெளிவர இருப்பதாகவும் கூறினார்.   

Related post