துரிதம் விமர்சனம்

 துரிதம் விமர்சனம்

திருவருள் ஜெகநாதன் தயாரிப்பில் ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ் ,பாலசரவணன் ,பூ ராமு ,ராமச்சந்திரன் (ராம்ஸ்), வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா நடிப்பில் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “துரிதம்”.

எதை பேசுகிறது இப்படம்?

மேல் சாதி பெண்ணை காதலிக்கும் கீழ் சாதி காதலனையும், அந்த பெண்ணையும் ஆணவக் கொலை செய்ய. அது சாதிக் கலவரமாக மாற, அதில் சிக்கிய மூவரின் வாழ்க்கையை ஒன்றிணைத்து காட்டுகிறது இப்படம்.

கதைப்படி,

சென்னையில் வாடகை கார் டிரைவராக வருகிறார் ஜெகன். இவரது காரில் நாயகி ஈடன் உடன் அவரது தோழிகளான வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்ட நால்வரும் தினசரி அலுவலகத்திற்கு பணிக்குச் செல்வது வழக்கமான ஒன்று.

நாயகி ஈடனை ஒருதலைபட்சமாக காதலிக்கிறார் ஜெகன். ஈடனின் தந்தையான வெங்கடேஷ், கிராமத்தில் இருந்து கொண்டு மணிக்கொருமுறை தனது மகளுக்கு போன் செய்து எங்க இருக்க.? என்ன பண்ட்ற.? என்ற டார்ச்சர் கொடுக்கும் ஒரு குணம் படைத்தவர்.

இந்நிலையில், தீபாவளி நெருங்கி விட இதோடு சென்னையை விட்டு சென்று விட தனது வேலையை ராஜினாமா செய்து விடுகிறார் ஈடன்.

ஈடன் இனி தனது காரில் வரமாட்டார் என்று அறிந்து காதல் தோல்வியாக எண்ணிக் கொண்டு கவலையில் இருக்கிறார் ஜெகன்.

அதே சமயம், ஊரில் கீழ் சாதி மேல் சாதி மோதலில் தனது தந்தையை பறி கொடுத்துவிட்டு சென்னையில் பணிபுரிந்த ராம்ஸ் தீபாவளிக்கு தனது ஊருக்கு பயணப்படுகிறார்.

எதிர்பாராதவிதமாக, நாயகி ஈடனை நாயகன் ஜெகன் சென்னையில் இருந்து பைக்கில் கூட்டிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

செல்லும் வழியில் நாயகி ஈடனை காரில் கடத்தி விடுகிறார் ராம்ஸ்.

அதன்பிறகு நாயகன் நாயகியை கண்டுபிடித்தாரா.? நாயகியின் தந்தை வெங்கடேஷுக்கு உண்மை தெரிந்ததா.? நாயகனின் காதலை நாயகி ஏற்றுக் கொண்டாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

சண்டியர் படத்திற்கு பின் இப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் ஜெகன். ஆக்ஷன் காட்சியில் மிரட்டியும், நாயகி ஈடன் கடத்தப்பட்ட பின் அவர் முகத்தில் வரும் அச்சம், பதட்டம் என கிடைக்கும் கேப்பில் ஸ்கொர் செய்துள்ளார் ஜெகன்.

படத்தின் இன்ட்ரோ காட்சி முதல் ஜெகனுக்கும் பாலசரவணனுக்குமான காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நாயகி ஈடன், மனதை கவரும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலை வெளியிலும் சொல்ல முடியாமல், தன்னுள் மறைத்து வைக்கவும் முடியாமல் சாதி வெறி பிடித்த தன அப்பாவுக்கு பயந்து அவர் நடித்திருக்கும் காட்சிகள் பாராட்டத்தக்கவை.

இந்த அளவிற்கு மோசமான ஒருவரை கணவன் கதாபாத்திரத்தில் நடித்து பார்த்திருப்போம். ஆனால், அப்பாவுக்கு செல்லப்பிள்ளைகள் பெண் பிள்ளைகள் தான் என்பதை சந்தேகிக்கும் அளவிற்கு சந்தேகப்படும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஏ.வெங்கடேசன். அவரின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வெயிட்டேஜ் கொடுத்திருந்தால் படம் மிரட்டலாக இருந்திருக்கும்.

ஒரு கட்டத்தில் தந்தையான வெங்கடேசிடம் நாயகி ஈடன் சிக்கி விடுவாரோ என்ற ஒரு படபடப்பை கொண்டு வந்து காட்சியை விறுவிறுப்பாக்கி வைத்துவிட்டார் இயக்குனர்.

கிராமத்தில் நடக்கும் ஜாதி மோதல், சிட்டியில் நடக்கும் காதல் இரண்டையும் பைபாஸ் ரோட்டில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

படம் ஆரம்பித்த 20 நிமிடத்திற்கு பின், சென்னை-மதுரை மற்றும் சேலம் பை-பாஸ் ரோடுகளில் மட்டுமே படம் முழுக்க முழுக்க காட்சி படுத்தப் பட்டிருக்கிறது.

நாயகியை கடத்திய ராம்ஸ், நாயகியை என்ன செய்வார். நாயகி ஈடன் நண்பர்களுடன் இல்லை என்ற உண்மை தெரிந்தால் ஏ.வெங்கடேசன் என்ன செய்வார். இவ்விருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட நாயகன் ஜெகன் எப்படி ஈடனை மீட்பார் என்று இரண்டாம் பாதியை பரபரப்பாக வைத்துள்ளார் இயக்குனர்

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், உதயம் NH4 மாதிரியான ஒரு த்ரில்லர் படைப்பாக துரிதம் இருந்திருக்கும்.

வாசன் & அன்பு டென்னிஸின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

பின்னணி இசையின் மூலம் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார் நரேஷ்.

துரிதம் – பஞ்சமில்லா வேகம்  – (3/5)

Related post