“பன்னீர்செல்வத்தை தொண்டராக பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்”

 “பன்னீர்செல்வத்தை தொண்டராக பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்”

ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்…

2001 செப்டம்பர் 21 ல் முதன்முறையாக ஒலித்த இந்த குரல் இன்று தமிழகத்தின் அசைக்கமுடியாத ஒரு குரலாக மாறியிருக்கிறது. அரசியலோ, சினிமாவோ எந்தவொரு பின்புலமும் இன்றி தமிழகத்தில் ஒருவர் முதலமைச்சர் ஆனது இதுவே முதல்முறை.

தவறிழைத்தால் கண் இமைக்கும் நேரத்திற்குள் பதவியை மாற்றும் ஒரு தில்லான ஆளுமை தான் செல்வி ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளுமையால் ஒருவர் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அவரின் உழைப்பு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

2001 ல் டான்சி வழக்கால் முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா, அடுத்த முதலமைச்சரை தேர்தெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்.

“அடுத்த முதல்வர் யார்?” என்ற கேள்வியை ஜெயலலிதாவிடமே பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு சற்றும் தாமதிக்காமல் “அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம்” என அவர் அறிவித்தது, அதிமுகவில் மட்டுமல்ல தமிழகத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதுவரை அப்படியொரு நபர் இருப்பது இங்கு பல பேருக்கு தெரியாது.

ஊர் பேர் தெரியாத ஒருவர் முதலமைச்சர் பதவியை எப்படி கையாளப்போகிறார்? என்ற கேள்விக்கு தனது திட்டங்களால் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் ஓபிஎஸ்.

  • அரசு அங்கீகாரம் பெறாமல் ஸ்கேன் மையங்கள் செயல்படுவது, ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிவிப்பது சட்டப்படி குற்றம்.
  • அரசு அலுவலக மற்றும் கல்லூரி கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டிடங்களை உருவாக்க வேண்டும்.
  • போதை பாக்குகளுக்கு தடை மற்றும் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை.
  • வருமான வரம்பிற்கு ஏற்றார்போல் நியாயவிலை கடைகளில் பச்சை, நீல நிற அட்டை வழங்க ஏற்பாடு.

என ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்களை, முதலமைச்சராக பதவி வகித்த ஐந்தே மாதங்களில் மின்னல் வேகத்தில் அமல்படுத்தினார்.

இது இவரின் சாதனையாக ஒரு புறம் பார்க்கப்பட்டலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்தும், அவர்களுக்கு அடுத்து வந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டது அவரின் உழைப்புக்கு ஏற்ற வெற்றியாக மறுபுறம் பார்க்கப்பட்டது.

இந்நிகழ்வைப் பற்றி ஜெயலலிதாவே “பன்னீர்செல்வத்தை தொண்டராக பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்” என புகழாரம் சூட்டினார்.

எது எப்படியோ தலைமை மீது விசுவாசத்துடனும் நம்பிக்கை, விடாமுயற்சியோடு உழைத்தால் அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

 

Related post