Sakkarai Thookalam Oru Punnagai Movie Review

 Sakkarai Thookalam Oru Punnagai Movie Review

நபீஸா மூவிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை.

இதில் நாயகனாக ருத்ரா, சுபிக்ஷா, சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் பத்மநாபன்.ஆடியோகிராபியில் தங்கப்பதக்கம் வென்ற ருத்ரா சிறந்த ஒலிப்பதிவாளராக இருக்கிறார். பாட்டி, அப்பா, அத்தையுடன் வசிக்கும் ருத்ராவை, சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் சுபிக்ஷா ஒலிகள் சம்பந்தமாக டாகுமெண்டரிக்காக  சந்திக்கிறார். ருத்ராவுடன் சேர்ந்து சுபிக்ஷா சிறப்பாக ஒலிப்பதிவு செய்து வேலையை முடித்து விட்டு சென்னைக்கு கிளம்புகிறார். அதன் பின் அந்த டாகுமெண்டரிக்காக சுபிக்ஷாவிற்கு பரிசு கிடைக்க, பிபிசியில் ஆடியோ டாகுமெண்டரி செய்ய அழைப்பு வர, அதில் பெரிய அளவில் முன்னேற ருத்ராவை சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார். இருவரும் காதலர்களாக வலம் வந்தாலும் சுபிக்ஷா தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருப்பதையும் தான் ஆரம்பித்த பணிகளை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதை அறிந்து கொள்கிறார் ருத்ரா. சுபிக்ஷாவின் நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும் ருத்ரா சுபிக்ஷா மீது இருக்கும் காதலால் வேண்டா வெறுப்பாக தங்குகிறார். இதனிடையே சுபிக்ஷாவின் கணவர் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் வர, ருத்ரா வேறு வழியின்றி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்து விடுகிறார். ருத்ராவை தேடி சுயநலத்திற்காக சுபிக்ஷா மீண்டும் ஊருக்கு வந்து ருத்ராவை அழைக்கிறார். இறுதியில் ருத்ரா என்ன முடிவு எடுத்தார்? சுபிக்ஷா விரித்த வலையில் வீழ்ந்தாரா? சுபிக்ஷாவுடன் சென்றாரா? இல்லை அவரை விட்டு விலகினாரா? என்பதே மீதிக்கதை.

இந்த படத்திற்காக சிறந்த நடிகராக பல்வேறு திரைப்பட விழாவில் விருது பெற்ற அறிமுக நாயகன் ருத்ரா கதிராக ஒலிகளை பதிவு செய்ய மலைகள், அருவிகள், காடு,மலை, மேடுகள் என்று உபகரணங்களை வைத்துக் கொண்டு செல்லும் காட்சியில் பல இடர்பாடுகளை சந்தித்தாலும் யதார்த்தமாகவும், மலையாளம் கலந்த தமிழில் நிதானமாக வார்த்தைகளை சொந்தமாக பேசி அமைதியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடித்திருப்பதற்காக பாராட்டுக்கள்.

கதாநாயகி ஸ்ருதியாக சுபிக்ஷா காரியவாதியாக, எதற்கும் துணிந்த தைரியம் மிகுந்த பெண்ணாக, சுயநலமாக யோசிக்கும்  நவீன கால பெண்ணின் நடவடிக்கைகளுடன் வாழும் பெண்ணாக வருகிறார். இவர்களுடன் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் பக்கமேளங்கள்.

ஒளிப்பதிவு  –  பிஜு விஸ்வநாத், இசை – ராஜேஷ் அப்புகுட்டன் – ருத்ரா, பாடல்கள் – கட்டளை ஜெயா, எடிட்டிங். – சுதாகர் அனைவருமே கச்சிதமாக செய்துள்ளனர்.வித்தியாசமான தலைப்பு படத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும் ஒலிப்பதிவாளரின் காதல் கதையில் கொஞ்சம் செண்டிமெண்ட், சோகம், பிரிவு என்று திரைக்கதையமைத்து எழில்மிகு காட்சிகளையும், ஒலிகளையும் கேட்கச் செய்து சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதிலேயே இயக்குனர் மகேஷ் பத்மநாபன் திறமை பளிச்சிடுகிறது.

Related post