3:33 Movie Review

 3:33 Movie Review

Bamboo Trees ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் “3:33”. இப்படத்தில், நடன இயக்குனர் சான்டி ஹீரோவாகவும் அறிமுக நாயகி ஸ்ருதி கதாநாயகியாகவும், ரமா, ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில்   கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார்.

தந்தையை இழந்த சாண்டி, வேலை தேடி அலைகிறார். காரணம், நீ பொறந்த நேரம் அப்படி என்று எங்கு போனாலும் அதையே கூறுகின்றனர் அனைவரும். சாண்டி பிறந்த நேரம் 3:33. இது அபாயகரமான நேரம் என பலரும் கூற வெறுப்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

கணவனை பிரிந்த தனது அக்கா ரேஷ்மா , அக்காவின் குழந்தை மற்றும் அம்மா ரமா நால்வரும் ஒரு வீட்டிற்கு குடித்தனம் செல்கின்றனர். அங்கு சரியாக 3:33 மணியானதும் ஒரு அமானுஷ்ய சக்தி சாண்டியை படாத பாடு படுத்துகிறது.
அதனால் பல இன்னல்களை சந்திக்கின்றார் சாண்டி. குடும்பமும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. இறுதியாக சாண்டி தனது குடும்பத்தை அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..

நாயகன் சாண்டி, தனது கேரக்டருக்கு ஏற்றாற்போல் பொறுப்புணர்ந்து  நடித்திருக்கிறார். ஆனால், ஒரே மாதிரியான முகபாவனைகள்  மட்டுமே சாண்டி கொடுத்திருப்பதால் நடிப்பின் அடுத்த கட்டத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம். நாயகி ஸ்ருதி அழகாக வந்து செல்கிறார்.  கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து தன் பங்கை நிறைவு செய்திருக்கிறார்.

ரமா, ரேஷ்மா இருவரும் கதைக்கு சரியான தேர்வு தான். கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பெரிதான காட்சிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால், அவருக்கான காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.

வழக்கமான பேய் படங்களின் வரிசையில் இப்படம் சற்று மாறுபட்டு இருப்பதில் சற்று ஆறுதல். சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். காட்சிகளை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். ஹர்ஷவர்தனின் பின்னனி இசை, மிரள வைத்திருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே கதை ஆரம்பித்தாலும், இறுதி வரை 3:33 மணிக்கு பேய் வருவதும், பின் செல்வதும் என மீண்டும் மீண்டும் காட்சிகள் கொண்டு செல்லப்பட்டதால் சற்று பொறுமை சோதித்திருக்கிறது. கடைசி 10 நிமிடங்கள் மட்டும் காட்சி மாறி க்ளைமாக்ஸிற்குள் செல்கிறது.

படத்தின் ஆரம்ப போக்கை மாற்றி போக போக கதையின் மையத்திற்குள் சென்றிருந்தால் சுவாரஸ்யம் மெல்ல மெல்ல ஏறியிருந்திருக்கும். இயக்குனர் அதை செய்யாமல் விட்டது சற்று சறுக்கியிருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்.

Spread the love

Related post

You cannot copy content of this page