800 விமர்சனம்

 800 விமர்சனம்

எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “800”.

கதைப்படி,

பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் இந்த “800”. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்திய சாதனை நிகழ்த்தி வைத்திருப்பதால் இப்படத்திற்கு “800” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தேயிலை பறிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கை செல்லும் தொழிலாளிகளின் வம்சாவளியில் பிறந்தவர் முரளிதரன். இவரது தந்தையாக வருபவர் வேலா ராமமூர்த்தி.

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார் முரளிதரன். இவரின் பவுலிங் திறமையை கண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் டீமில் இணைத்துக் கொள்கிறது.

இருந்தும் தமிழன் என்பதால் தொடர்ந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தொடர்ந்து பல தடங்கல்கள்.. எல்லாவற்றையும் தாண்டி எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் மதுர் மிட்டல். பார்ப்பதற்கு லுக், நடை, பவுலிங்க் ஸ்டைல் என அனைத்தும் முத்தையா முரளிதரனையே பார்ப்பது போன்ற ஒரு ஃபீலிங்கைகொடுத்து விட்டார் மதுர். விடாமுயற்சி எடுத்தது அவரின் அணுகுமுறையிலேயே தெரிகிறது.

முரளிதரனின் கதையை சொல்லும் ஒரு பத்திரிகையாளராக வருகிறார் நாசர். தனது மகனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்லும் போது கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கிறது. தமிழுக்காகவா அல்லது இலங்கைக்காகவா அல்லாமல் தனக்காகவும் கிரிக்கெட்டிற்காகவும் விளையாடியதாக கூறும் இடங்களில் அவரின் நிலைப்பாடு நன்றாகவே தெரிந்தது.

படத்தில் நடித்த வேலா ராமமூர்த்தி, வடிவுக்கரசி, ரித்விகா, அருள் தாஸ், ஹரிகிருஷ்ணா, ரித்விக் என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தமிழ் நடிகர்களாகவே தென்பட்டதால், நம்மால் எளிதில் படத்திற்குள் பயணப்பட முடிந்தது.

ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். அவரின் ஒளிப்பதிவு மாயாஜாலமே படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

ஜிப்ரானின் இசையும் பக்கபலமாக நிற்கிறது. பின்னணி இசை கதையோடு நம்மைபயணிக்க வைத்தது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை ஒரு உயிரோட்டமாக கொடுத்து நம்மை பிரம்மிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். தமிழர்களின் வாழ்க்கை படும் பாடு, விடுதலைபுலிகளின் போராட்ட வாழ்வியல் என இரு பக்கமும் நேர்த்தியாக பயணப்பட்டிருக்கிறார் இயக்குனர்.

800 – முத்தையா முரளிதரனின் வாழ்க்கை உயிரோட்டம்.. –  3.5/5

Related post