சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயர் பங்காளியூர். அந்த ஊரில் மருந்துக்குக்கூட மாமன் மைத்துனர் கிடையாது. எல்லோருமே பங்காளிகள்தாம். அனைவருமே ஒருவருக்கொருவர் பகையாளிகள்.

அதாவது ஒருவரின் வீடு தீப்பற்றி எரிந்தால் அதற்காகத் தீயணைப்பு வண்டியை அழைக்காமல் ஏமாற்றி வீடு முழுமையாக எரியும்வரை வேடிக்கை பார்ப்பவர்கள்.

இன்னொருபுறம், ஒட்டுமொத்த ஊரின் வேலையே பில்லிசூனியம் செய்வது, இரவெல்லாம் வேலை செய்துவிட்டு பகல் முழுதும் தூங்கக் கூடிய ஊர். அதன் பெயர் சிங்கப்பூர்.

பங்காளியூரில் பிறந்த நாயகன், அந்த ஊரைத் திருத்த எடுக்கும் முயற்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார். அங்கு அவர் செய்யும் வேலைகளும் அதன் விளைவுகளுமே திரைக்கதை.
  
நாயகனாக கார்த்திகேயன்வேலுவும் நாயகியாக சஞ்சனாபுர்ளியும் நடித்திருக்கிறார்கள். நாயகன் கறுப்பா களையாவும் நாயகி செவப்பா சிறப்பாவும் இருக்கிறார்கள்.

நாயகனின் நண்பராகவும் மனைவியாகவும்(?) நடித்திருக்கும் கிஷோர்தேவுக்கு பெண்வேடம் பொருத்தம். 

பங்காளீயூரின் பங்காளிகளும் சிங்கப்பூரின் மந்திரவாதிகளும் சிரிக்க வைக்கிறார்கள். ஒவ்வொருவரும் விதவிதமாக இருப்பதே சிரிப்பு. அதிலும் ஹே ஹே என்று சொல்லி கைகளை சிவதாண்டவம் போல் காட்டும் சூனியக்காரர் சூப்பர்.

நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உருவாவதும் அதற்கு அருவி குருவி ஆகிய சிறுமிகள் ஒத்தூதுவதும் நன்று.

சதிஷ்ரகுநாதனின் இசையில் குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். கதைக்களத்துக்கேற்ப அமைந்திருக்கின்றன.

பின்னணி இசைக்கு அதிக வாய்ப்புள்ள படம். நவிப்முருகன் அதற்கு நியாயம் செய்திருக்கிறார்.

திரைக்கதையில் சில தொய்வுகள், சொதப்பல்கள் இருந்தாலும் எல்லோரும் அனுபவித்த மையக்கருவை எடுத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை.

பொண்ணுக்கு எத்தனை பவுன் போடுவீங்க? என்கிற காட்சி உட்பட பல காட்சிகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன.

அடுத்தவரின் வெற்றியையோ புகழையோ பார்த்து வயிறெரியும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 

Related post