ஜாதி ஒரு சாக்கடை.. புத்த மதத்திற்கு மாறிய சாய்தீனா பேட்டி

கமலஹாசனின் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ திரைப்படத்தில் சிறைவார்டானாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் நடிகர் சாய் தீனா.
அதனை தொடர்ந்து இவர் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ எதற்கும் துணிந்தவன் ‘ படத்தில் தீனா நடித்து இருந்தார்.
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட மக்களுக்கு இவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சாய் தீனா குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். புத்த துறவி மௌரிய முன்னிலையில் புத்த மதத்தை தழுவதற்காக 22 விதிகளை சொல்லி நடிகர் தீனா புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார்.
இது குறித்து நடிகர் சாய் தீனா அவர்கள் பேட்டியில், ” நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன்.
நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான். இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்று சொல்வது தவறான ஒன்று. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஒரு சாக்கடை, குப்பை..” என்று கூறியிருந்தார்.