அஞ்சாமை விமர்சனம் 3.5/5

 அஞ்சாமை விமர்சனம் 3.5/5

இயக்கம்: எஸ் பி சுப்புராமன்

நடிகர்கள்: விதார்த், வாணி போஜன், ரகுமான், க்ரித்திக் மோகன்

ஒளிப்பதிவு: கார்த்திக்

இசை: ராகவ் பிரசாத்

தயாரிப்பு: திருச்சித்திரம்

கதைப்படி,

நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் தான் இந்த அஞ்சாமை.

திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் நடக்கிறது படத்தின் கதை. சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விதார்த். விதார்த்தின் மனைவியாக வாணி போஜன். இவர்களது மகனாக க்ரித்திக் மோகன்.

12ஆம் வகுப்பு முடித்த க்ரித்திக் அடுத்ததாக மருத்துவம் படிக்க விரும்புகிறார். அதற்காக நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் க்ரித்திக்.

தமிழகத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்று நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதாகியிருக்க, விதார்த்தும் க்ரித்திக்கும் ஜெய்ப்பூர் செல்கின்றனர்.

கடைசி நேர அழைப்பு, பதட்டம், கெடுபிடி என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தான்…

தமிழ் சினிமாவில் தான் ஒரு தனித்துவமான நடிகன் என்பதை கடந்த சில படங்களில் முத்திரை பதிப்பதாகவே தனது நடிப்பில் வெளிக்காட்டி வருகிறார் விதார்த். தனது மகனுக்காக போராடும் காட்சியில், அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் விதார்த். நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மாணாக்கர்கள் என்ன மாதிரியான முடிவெடுப்பார்கள் என்றறிந்து விதார்த், எடுக்கும் முன்னெடுப்பு கலக்கம்…

ஹீரோயின் வாணி போஜன், கதைக்கான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் ஹீரோயின்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து முத்திரை பதித்திருக்கிறார் வாணி. இவரின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது.

போலீஸாக இருந்து பின் வக்கீலாக மாறி, நீதிக்காக போராடும் ஒரு கருப்பு சிங்கமாக கர்ஜித்திருக்கிறார் ரகுமான். நீதிமன்றத்தில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் கைதட்டல் பெறும் வசனங்கள் தான்..

ஒளிப்பதிவு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை கதையோடு நகர்ந்து நம்மை கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறது.

தரமான கதையை கையில் எடுத்து அதில் வென்றும் காட்டியிருக்கிறார் இயக்குனர். சின்ன சின்ன விஷயத்தில் கூட, என்ன மாதிரியான நுணுக்கங்களை பயன்படுத்த முடியுமோ அதை அனைத்தையும் பயன்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார் இயக்குனர்.

யாரும் தொடத்தயங்கும் கதையை கையில் எடுத்து, நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் பெற்றோர்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

பெற்றோர்கள் நிச்சயம் பார்க்கும் படைப்பாக வெளிவந்து பாராட்டு பெறுகிறது அஞ்சாமை…

அஞ்சாமை – அஞ்சாமல் நிமிர்ந்த இயக்குனர்…

Related post