பிகினிங் திரைவிமர்சனம்

 பிகினிங் திரைவிமர்சனம்

ரோகினி, வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின் மற்றும் சிலர் நடித்திருக்கும் படம் தான் “பிகினிங்”. ஜெகன் விஜயா இயக்கியுள்ள இப்படம் “Asia’s First Split Screen” படமாகும். ஸ்ப்ளிட் ஸ்கிரீன் படம் என்றால் ஒரே திரையில் வலது புறம் ஒரு கதையும், இடதுபுறத்தில் ஒரு கதையும் ஒரே நேரத்தில் நடந்துக் கொண்டிருக்கும்.

கதைப்படி,

இடதுபுறம், மன வளர்ச்சி குன்றிய இளைஞனான வினோத் கிஷனும் அவரது அம்மாவான ரோஹினியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். தன் மகனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வைத்துவிட்டு, அவரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார் அம்மா ரோகிணி. டிவியில் வரும் கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டும், பாத்திரம் கழுவி வைத்தும், பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் வினோத்.

வலதுபுறம், இளம்பெண் கௌரி ஜி.கிஷனை மயக்க மருந்துச் செலுத்தி, தனது நண்பர்கள் இரண்டு பேரின் உதவியுடன் கடத்தி வந்து ஒரு அறையில் பூட்டி வைக்கிறார் சச்சின். மயக்கம் தெளியும் கௌரிக்குக் கையில் ஒரு சாதாரண பட்டன் போன் கிடைக்கிறது.

அதை வைத்து அவர் அங்கிருந்து தப்பித்தாரா? கடத்திய சச்சின் யார்? வினோத்தின் கதையும் கௌரியின் கதையும் எப்படி இணைகிறது? என்பது படத்தின் மீதிக்கதை.

ஒரே படத்தில் இரண்டு கதைகளை இயக்குவதே கடினம். அதிலும் ஒரே திரையில் இரண்டு கதைகளை இயக்குவது எவ்வளவு கடினம்? சிந்தித்து பார்க்கவே கடினமாக இருக்கிறது. ஆனால், அப்படி பட்ட ஒரு படத்தை எளிமையாக புரியும் வகையிலும், தற்போதுள்ள சூழலில் பெண்களுக்கு தேவையான ஒரு அறிவுரையையும், நம் சமூகம் எப்படி சீரழிந்து இருக்கிறது என்பதையும் உரக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் விஜயா.

கதை, திரைக்கதை எந்த அளவிற்கு முக்கியமோ நடிப்பும் ஒரு படத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் வினோத் கிஷன், கௌரி கிஷன் மற்றும் சச்சின்.

வினோத்துக்கு பாதி திரையையும், கௌரிக்கு பாதி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும். படம் முழுக்க நம் கவனத்தை ஈர்த்து தன் வசம் வைத்துக் கொண்டார் வினோத் கிஷன். “தெய்வ மகள்” படத்தில் விக்ரம் நடித்த நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றே சொல்லலாம். நடிப்புக்கென பல விருதுகள் குவித்து செல்வார் என்று நம்புவோம்.

மிக அழுத்தமான ஒரு பாத்திரத்தில் நடித்த கௌரி கிளைமாக்ஸ் காட்சியில் நம் கண்களை கலங்கடிக்க செய்துவிட்டார். வலியும், வேதனையும் கொண்ட ஒரு பாத்திரம் அது.

“Evil Laugh” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு.. அதை தன் முகத்தில் எப்போதும் வைத்து மக்களை ஒரு பீதியிலே வைத்திருந்தார் சச்சின்.

பிகினிங் – பெண்களுக்கான ஆரம்பம் – – (3.5/5)

Related post