போட் திரை விமர்சனம் – (2.25/5)

 போட் திரை விமர்சனம் – (2.25/5)

யோகி பாபு, ஷா ரா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சிலர் நடிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகி வெளியாகியுள்ள படம் “போட்”.

கதைப்படி,

1943ல் நடக்கும் இக்கதையில் மெட்ராஸைப் பூர்விகமாகக் கொண்ட குமரன் (யோகிபாபு) தனது பாட்டியுடன் சேர்ந்து, வெள்ளையரின் பிடியில் இருக்கும் தனது தம்பியை விடுவிக்க முயற்சி செய்கின்றனர்.

அந்த சமயத்தில் சென்னையின் மீது ஜப்பான் குண்டுமழை பொழிவதால் அதிலிருந்து தப்பிக்க தனது படகில் கடலுக்குள் செல்ல முயல்கிறார் யோகி பாபு. அவருடன் ஒரு கர்ப்பிணி (மதுமிதா) மற்றும் அவரது மகன், ஒரு கடவுள் மறுப்பாளர் (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு பிராமணர் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் (கவுரி கிஷன்), ஓர் இஸ்லாமியர் (ஷா ரா), ஒரு வட இந்தியர் (சாம்ஸ்) உள்ளிட்டோரும் படகில் ஏறிக்கொள்கின்றனர்.

தான் வந்த படகு விபத்தானதால் நடுக்கடலில் ஒரு வெள்ளைக்கார போலீசும் ஏறுகிறார். இதன் பிறகு வெள்ளைக்காரரால் ஏற்படும் சலசலப்பால் படகு சேதமடைகிறது. படகை கரைக்கு திருப்பவும் முடியாமல், மேற்கொண்டு நகரவும் முடியாத சூழலில் படகில் இருப்போர் சில முடிவுகளை எடுக்கின்றனர்.

அதேநேரம் படகில் ஒரு தீவிரவாதி மாறுவேடத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. அந்த தீவிரவாதி யார்? படகில் இருப்பவர்கள் இறுதியாக என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் கடலுக்குள் சென்று விடுகிறது. வெறும் 10 கதாபாத்திரங்கள், 1 போட் மற்றும் நடுக்கடல் என இதற்குள் மட்டுமே திரைக்கதை அமைக்க முயற்சித்துள்ளார் சிம்பு தேவன்.

ஆனால், படகு ஒரு இடத்தில் பழுதாகி நிற்பது போல் கதையும் நின்றுவிட்டது. மேலும், கதையை நகர்த்துவதற்காக சுறா மீனிடமிருந்து தப்பிப்பது. அரசியல் பேசுவது என பழைய படங்கள் பாணியில் தான் திரைக்கதையும் அமைந்துள்ளது.

யோகி பாபுவின் நடிப்பு இப்படத்திற்கு செட் ஆகவில்லை. வழக்கம் போல் காமெடி கதாபத்திரத்தில் கலக்கும் அவரை சீரியஸான படங்களான “மண்டேலா”, “கர்ணன்” போன்ற படங்களில் வெயிட்டேஜ் காட்டிய அவர் இப்படத்தில் அதை சற்று தவற விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

உடன் நடித்த அனைத்து பாத்திரங்களும் ஓகேவாக நடித்துள்ளனர். படத்தின் இசை நன்றாக இருந்தது, ஆறுதலான விஷயம் என்றால் “கர்னாடிக் கானா” பாடல் ஒன்றை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் அது படத்திற்கு தேவையான ஊக்கத்தை கொடுத்தது.

ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை காட்டி சிறப்பு சேர்த்துள்ளது.

ஆனால், படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் மட்டுமின்றி படம் பார்க்கும் மக்களும் நீச்சல் தெரிந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.

போட் – கரையை கடந்தது.

Related post