பைரி விமர்சனம்

 பைரி விமர்சனம்

இயக்கம்: ஜான் கிளாடி

நடிகர்கள்: சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன்.

ஒளிப்பதிவு: ஏ வி வசந்த குமார்

இசை: அருண் ராஜ்

எடிட்டிங்: ஆர் எஸ் சதீஷ் குமார்

தயாரிப்பாளர்: துரை ராஜ்

கதைப்படி,

நாகர்கோவில் தான் படத்தின் கதைக்களம். ஊரை சுற்றி இருக்கும் இளைஞர்கள் அனைவரும் புறா ரேஸ் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மதுரைக்கு எப்படி ஒரு ஜல்லிக்கட்டோ, அதேபோல் அந்த பகுதி மக்களுக்கு புறா ரேஸ் விடுவது என்பது அவர்களின் மூச்சாக இருக்கிறது.

புறாவை தங்களது உயிராக எண்ணி ஒவ்வொருவரும் வளர்த்து வருகின்றனர். அதில் என்னென்ன ஜாதி உள்ளது. அவற்றை எப்படியெல்லாம் பேணி பாதுகாத்து ரேஸூக்கு தயார் செய்வது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துசெய்து வருகின்றனர்.

அப்படி, விஜி சேகருக்கு மகனாக இருக்கும் நாயகன் சையத், இஞ்சினியரிங் படித்துவிட்டு புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, தனது வீட்டு மொட்டை மாடியில் புறா வளர்த்து வருகிறார்.

புறாவை பறக்க விடுவதில் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது. தனது புறாவிற்கு ஒன்னென்றால் கொலை செய்யும் அளவிற்கு கோபம் வருகிறார் நாயகன் சையத்திற்கு.

அந்த ஏரியா இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒரு தலைவனாக வருகிறார் ரமேஷ் ஆறுமுகம்.

இந்நிலையில், அப்பகுதியில் புறா ரேஸ் விடுவதற்கான காலம் வருகிறது. இதனை ரமேஷ் ஆறுமுகம் நடத்துகிறார். அப்பகுதியில் சில கொலைகளை செய்து பெரும் ரெளடியாக சுற்றி வருகிறார் வினு லாரன்ஸ். புறா ரேஸ் விடும் சமயத்தில் வினு லாரன்ஸுக்கும் சையத்திற்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதல் கத்தி குத்தில் சென்று நிற்கிறது.,

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதையாக வந்து நிற்கிறது.

நாயகன் சையத் மஜீத், ராஜலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வேகம், சுறுசுறுப்பு, எமோஷன்ஸ், காதல், செண்டிமெண்ட் என நாலாபுறமும் களமிறங்கி நடித்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்த வேகத்தை, இறுதி வரைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார் சையத்.

இரண்டாவது தூணாக படத்தை தாங்கிச் சென்றவர் சையத்தின் அம்மாவாக நடித்திருந்த விஜி சேகர் தான். தனது மகன் தவறான வழியில் சென்றுவிடாத ஒரு காக்கையை போல கண்ணாக இருந்து பாதுகாத்து அவனை கரை சேர்க்க போராடும் ஒரு தாயாக நடித்து செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார் விஜி.

நீளமான வசனத்தை உணர்ச்சி பொங்க பேசி பல இடங்களில் க்ளாப்ஸ் வாங்கி விடுகிறார் விஜி.

 

அடுத்ததாக, ராஜலிங்கத்திற்கு நண்பனாக நடித்திருந்த இயக்குனர் ஜான் கிளாடி. தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நடிகன் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

அடுத்ததாக, ரமேஷ் ஆறுமுகம்… ஊருக்கு ஒருவர் இவரை போல் இருந்து விட்டால் எந்த பிரச்சனையும் இனி எட்டிப் பார்க்காது என்பதற்கு ரமேஷ் பண்ணையார் போன்று ஒரு ஆள் வேண்டும் என்று ஏங்க வைக்கும் அளவிற்கு தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரமேஷ் ஆறுமுகம்.

நாயகியாக வந்த மேக்னா எலன், வந்த ஒரு சில காட்சிகளையும் அழகாக செய்து கொடுத்து சென்று விட்டார். மற்றொரு நாயகியான சரண்யா, அம்மண்ணின் மகளாக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய வினு லாரன்ஸ் படத்திற்கு மிகப்பெரும் பலம். அவரது உடல் மொழி, பேச்சு மொழி என அனைத்தும் படத்திற்கு பெரும் துணையாக நிற்கிறது. ஊரில் இருக்கும் ரெளடி எல்லாம் இப்படிதாம்யா இருப்பான் என்று சொல்லும் அளவிற்கு தனது கேரக்டரை பக்காவாக செய்து முடித்திருக்கிறார் வினு லாரன்ஸ்.

படம் எடுக்க்ப்பட்ட மண், மக்கள், கதைக்களம், நடிப்பு என அனைத்தும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது.

பின்னணி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். ஏனென்றால், படத்தின் ஆரம்பத்தில் இருந்த ஒரு வேகமான இசை படத்தின் இறுதி வரைக்கும் செல்வது ஒருவிதமான எரிச்சலை கொடுத்து விட்டது.

படத்தின் ஓட்டத்திற்கு பின்னால், வில்லுப்பாட்டு ஓடிக் கொண்டிருப்பது படத்தினை பார்ப்பதற்கு ஆவலைத் தூண்டியது.

ஆங்காங்கே எட்டிப் பார்த்த சாதீயக் குறியீடுகளை தவிர்த்திருந்திருக்கலாம். மண் வாசனை அதிகம் எட்டிப் பார்த்ததால், அப்பகுதி மக்களுடன் எளிதில் கனெக்ட் செய்யும் விதமாக படம் அமைந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

ஒளிப்பதிவு படத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

பைரி – வேகம்… –  3.25/5

Related post