சித்தா – விமர்சனம்

 சித்தா – விமர்சனம்

எழுத்து & இயக்கம் : எஸ் யூ அருண் குமார்

இசை : திபு நைனன் தாமஸ்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

நடிகர்கள்: சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர்,

கதைப்படி,

அரசு வேலை பார்த்த அண்ணன், திடீரென இறந்து விட அந்த வேலை சித்தார்த் வசம் வருகிறது. அண்ணனின் 7 வயது மகள் சிட்டா மற்றும் அண்ணியை கவனித்து வருகிறார் சித்தார்த்.

அண்ணனின் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வருகிறார் சித்தார்த். தனது நண்பனின் அக்கா மகளும் சிட்டாவும் ஒரே பள்ளியில் படித்து வரும் தோழிகள்.

இருவர் மீதும் சித்தார்த் மிகவும் பாசமாக இருப்பார். இந்த சூழலில், சிட்டாவின் தோழி தனியாக ஒரு இடத்திற்கு சென்று விட்டு வந்து விடுகிறார். அன்றிலிருந்து ஆண்கள் யாரை பார்த்தாலும் அஞ்சி நடுங்குகிறார்.

அதன் பிறகு தான் தெரிய வருகிறது அந்த நடுக்கத்திற்கு ஒரு ஆண் காமூகன் காரணம் என்று. அது சித்தார்த் என்று தெரிந்து அனைவரும் சேர்ந்து அவரை அடிக்கின்றனர். இச்சமயத்தில், சிட்டாவை யாரோ கடத்தி விடுகின்றனர்.

செய்வதறியாது திகைக்கிறார் சித்தார்த்.? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

மிகவும் அழுத்தமான கதை என்பதால், அதை சரியாக உணர்ந்து கொண்டு மிகச் சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் குமார். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே யதார்த்த நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

சித்தார்த் மொத்த கதையையும் தாங்கி கொண்டு பயணித்தார். ஹீரோயினாக நடித்த நிமிஷா முதல் காட்சியிலேயே நச்சென மனதில் பதிந்துவிடுகிறார்.

காட்சிகள் ஒவ்வொன்றையும் மிகவும் யதார்த்தமாக கொடுத்து நம்மை கதையோடு எளிதில் பயணிக்க வைத்து விட்டார் இயக்குனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள், எப்படியான மனநிலை காட்டுவோர்களோ அப்படியான காட்சியை திரையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்..

மசாலா படம் போல் இல்லாமல், வில்லன் என்றால் இப்படி தான் இருப்பான் என்ற எண்ணத்தை போக்கி இப்படியும் இருப்பார்கள் என்று யதார்த்தத்தை அதிகமாகவே புகுத்தி படத்தின் விறுவிறுப்பை இன்னும் அதிகமாகவே ஏற்றியிருக்கிறார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோர்களும் கட்டாயம் பார்க்கும்படியான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் குமார்.

சித்தார்த்தின் சினிமா கேரியரில் இப்படம் அவருக்கு ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்..

இருந்தாலும், இவ்வளவு வெளிச்சமாக இதை காட்ட வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆமை வேகத்தில் நகரும் முதல் பாதியில் விறுவிறுப்பை சற்று ஏற்றியிருந்திருக்கலாம்.

திபு நினைன் தாமஸ் இசையில் பாடல்கள் மெல்லிசை தான். பின்னணி இசையில் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் சிந்த வைத்துவிட்டார் விஷால் சந்திர சேகர்.

பாலாஜி சுப்ரமணியம் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை காட்சிகளாக நம் கண்களுக்கு அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மொத்தத்தில்,

சித்தா – விழிப்புணர்வு – 3.5/5

Related post