காபி வித் காதல் விமர்சனம்
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல்.
காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி மற்றும் ஜெய் நால்வரும் உடன் பிறந்தவர்கள். இதில், ஸ்ரீகாந்திற்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. திவ்ய தர்ஷினிக்கு திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்., ஜீவா மற்றும் ஜெய் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
ஜீவா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் மூன்று வருடங்கள் “லிவ்விங்” வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
சமையல் கலை படித்துள்ள ஜெய்க்கு ஊட்டியில் பெரிய ரெஸ்டாரண்ட் துவக்க ஆசை. அம்ரிதா, ஜெய் இளம் வயதிலிருந்தே நண்பர்கள். அம்ரிதா ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால், ஜெய்யோ அமிரிதாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
லிவ்விங்க் வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜீவாவை விட்டு பிரிகிறார் ஐஸ்வர்யா தத்தா..
அதே சமயத்தில், ஊட்டியில் தனது ரெஸ்டாரண்டை நடத்த எக்ஸ் மிலிட்டரி ஒருவரின் மகளான மாளவிகாவை திருமணம் செய்ய திட்டமிடுகிறார் ஜெய்.
ஜெய்யின் திட்டம் நிறைவேறியதா.? மாளவிகாவின் காதல் என்னவானது.? ஜீவாவின் வாழ்க்கை எப்படி திசை மாறியது.? இதற்கு நடுவே ஸ்ரீகாந்த் ஆடும் ’லீலை’ ஆட்டத்தின் முடிவு என்ன.? என்பதே படத்தின் மீதி கலகல கதை.
இப்படத்தில் நடித்த அனைவரும் அவரவர் பாணியில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களை நச்சென்று தேர்வு செய்திருக்கிறார்கள். கதைக்களமும், கதை நகர்வும் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும் படியாகவும் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
ஜீவாவும், ஜெய்யும் வழக்கம் போல கலகலவுடன் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில கட்சிகளில் நடித்து வந்த டிடி கதையின் முக்கிய நகர்வாக இருக்கிறார். அவருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
படத்தின் நாயகிகளான மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா என அனைவரும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரைசா ஒரு படி மேலே சென்று இப்படத்தில் பியானோ வாசித்துள்ளார்.
சுந்தர் சி என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது, அதை இப்படத்திலும் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர். தலை சுற்ற வைக்கும் கதை என்றாலும், கலகலப்பு சிறிது ஆசுவாசப்படுத்துகிறது.
யோகிபாபு & ரெடின் இருவரின் நகைச்சுவை காட்சிகள் குறைவாக இருப்பது ஏமாற்றதையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கிருஷ்ணசாமி காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர் ஃபுல்லாக கொடுத்து கதையோடு பயணிக்க வைத்து படத்திற்கு பலமாக இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா பாடல்களில் ஆட்டம் போட வைத்து, பின்னணியில் அமர வைத்திருக்கிறார்.
என்ன கதை என்று கேட்காமல், கலகலவென சிரித்து விட்டு செல்லுங்கள் என்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
காபி வித் காதல் – நான் ஸ்டாப் நகைச்சுவை – (2.5/5)