கான்ஜுரீங் கண்ணப்பன் விமர்சனம்

 கான்ஜுரீங் கண்ணப்பன் விமர்சனம்

இயக்கம்: செல்வின் ராஜ் சேவியர்

நடிகர்கள்: சதீஷ், ஆனந்தராஜ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நாசர், ரெடின் கிங்க்ஸ்லி,

ஒளிப்பதிவு: யுவா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

கதைப்படி,

அப்பா விடிவி கணேஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன், மகன் சதீஷ், சரண்யா பொன்வண்ணனின் அண்ணனாக வருபவர் நமோ நாராயணன். இவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

சதீஷ் வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் ஒரு சிறிய பொம்மை கட்டிய பொருள் ஒன்றை எடுக்கிறார். அதில், இருந்த இறகு ஒன்றினை பிய்த்து விடுகிறார் சதீஷ்.

அதன்பிறகு, சதீஷ் தூங்கினால் அவரது கனவில் ஒரு அரண்மனை போன்ற வீட்டிற்குள் செல்வதும், அங்கு அமானுஷ்யங்கள் இவரை கொல்ல வருவதுமாக நடக்கிறது. கனவில் நடப்பவை நிஜத்திலும் எதிரொலிக்கிறது.

தொடர்ச்சியாக சதீஷின் குடும்பம், ரெளடியாக வரும் ஆனந்தராஜ், டாக்டராக வரும் ரெடின் கிங்ஸ்லி என அனைவரும் அந்த இறகை பிய்த்துவிட அனைவரும் கனவிற்குள் பயணப்பட்டு அந்த அரண்மனைக்குள் சிக்கி விடுகிறார்கள்.

இந்த கனவிற்குள் இருந்தும் அந்த அரண்மனைக்குள் இருக்கும் அமானுஷ்யத்திடம் இருந்தும் எப்படி இவர்கள் மீண்டு வந்தார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனான சதீஷ், யதார்த்தமாக காட்சிகளில் நடித்திருந்தாலும் ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை கெடுத்து வைத்திருக்கிறார். அதிலும், அவர்கள் வீட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்துமே ஏனோதானோவென்று சென்றது பெரும் தலைவலியாக மாறிப் போனது.

படத்தில் நமக்கு சிறிய ஆறுதலாக இருந்தது ரெடின் கிங்க்ஸ்லியும் ஆனந்தராஜ் மட்டுமே. இவர்கள் அடிக்கும் ஒரு சில காமெடிகள் ரசிக்கும்படியாக இருந்தது நம்மை கொஞ்சம் படத்திற்குள் அமர வைத்தது.

இப்படத்தில் நாசரும் ரெஜினாவும் இருக்கிறார்கள். அமானுஷ்யத்தை விரட்ட வந்தவர்கள் இவர்கள் தான். முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும் , இரண்டாம் பாதி வேகமெடுத்துவிடுகிறது.

பின்னணி இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவு அருமை.

படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் நடக்கும் ஒரு சில காட்சிகள் நமக்கு கோபத்தைத் தான் வர வைத்தது.

கான்ஜுரிங் கண்ணப்பன் – நேரம் போகவில்லை என்றால் ஒருமுறை பார்த்துவரலாம்… –  2.5/5

Related post