டிமாண்டி காலணி 2 – விமர்சனம் 2.75/5
இயக்கம்: அஜய் ஞானமுத்து
நடிகர்கள்: அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், முத்துக்குமார், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன்
இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன்
தயாரிப்பு: ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்
படத்தொகுப்பு: குமரேஷ்
கலை: ரவி பாண்டி
கதைப்படி,
முதல் பாகத்தின் கதை நடக்கும் போதே இரண்டாம் பாகத்தின் கதையும் ஒரு பக்கமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது போல் தான் படம் ஆரம்பிக்கிறது.
முதல் பாகத்தில் ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் கொல்லப்படுவதை போல காண்பித்திருப்பார்கள். இரண்டாம் பாகத்தில், அதில் ஒரு இளைஞனான அருள்நிதி மட்டும் உயிர் பிழைத்துக் கொள்வார் போல் கதை நகர்கிறது.
அதுமட்டுமல்லாமல், அருள்நிதியுடன் உடன்பிறந்த சகோதரர் ஒருவரும் இருக்கிறார். இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் ஆவர். மிகப்பெரும் கோடீஸ்வரனின் மகனாக ஒருவர் வளர, மற்றொருவர் தான் டிமாண்டி காலனியில் சிக்கிக் கொண்டவர்.
டிமாண்டி காலணியில் சிக்கிக் கொண்டவர் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்க, தனது தந்தையின் பல கோடி சொத்து தனக்கு வேண்டுமென்றால் சகோதரன் இறக்க வேண்டுமே என்றெண்ணுகிறார் பணக்கார அருள்நிதி.
கேன்சரில் தப்பித்த தனது காதல் கணவன், எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற குழப்பத்தில் இருக்கும் ப்ரியா பவனி சங்கர், தனது கணவனின் ஆன்மாவானது ஏதோ ஒரு இடத்தில் சிக்கியிருப்பதையும் அறிகிறார்.
இந்நிலையில், மீண்டும் அந்த புத்தகம் மற்றும் செயின் இரண்டும் வெளியே வர, ஆன்மாவின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இந்த ஆட்டத்தில் இருந்து இரண்டு அருள்நிதியும் தப்பித்தார்களா இல்லையா.?? ப்ரியா பவானி சங்கரின் கணவரின் ஆன்மாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா.??? என்பதே இந்த இரண்டாம் பாகத்தின் மீதிக் கதை.
டிமாண்டி காலணி படத்தின் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் மிகவும் தெளிவாக கனெக்ட் செய்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முதல் பாதியில் இதற்கான மெனக்கெடல் நன்றாகவே திரையில் தெரிந்தது., மேலும், தெளிவான ஒரு காட்சியை அதில் வைத்து அனைத்து ரசிகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் திரைக்கதையை அழகாக நகர்த்தியிருந்தார் இயக்குனர்.
முதல் பாதியில் அநேக இடங்களில் புல்லரிக்க வைக்கும் காட்சிகளை அதிகமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர்.
முதல் பாகத்தில் எப்படியொரு நடிப்பைக் கொடுத்து நம்மை சீட்டின் நுணியில் அமர வைத்தாரோ அதேபோல், இரண்டாம் பாகத்திலும் அதே நடிப்பைக் கொடுத்து நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார் அருள்நிதி.
படம் முழுக்க முழுக்க பயணப்படுவது ப்ரியா பவானி சங்கர் மீதி தான். இவர் தான் அந்த ஆன்மாவின் ஆட்டத்தை கண்டறிந்து அருள்நிதியின் உயிரைக் காப்பாற்ற போராடுகிறார். இவரின் நடிப்பும் பாராட்டும்படியாக தான் இருந்தது.
சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை ஒரீரு இடத்தில் கைதட்டல் கொடுக்க வைத்தாலும், அநேக இடங்களில் காதுக்குள் அதிகமான இரைச்சலை கொடுத்து எரிச்சலடைய வைத்துவிட்டார் இசையமைப்பாளர்.
ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். முதல் பாதி சற்று வேகம் எடுத்து நம்மை எண்டர்டெயின்மெண்ட் செய்தாலும், இரண்டாம் பாதி சற்று அல்ல அதிகமாகவே நம்மை சோதிக்க தான் வைத்து விடுகிறது.
முதல் பாகம் எளிமையாகவும் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக எடுப்பது தான், தமிழ் சினிமாவின் வழக்கம். அதே போல தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள். முதல் பாகம் கொடுத்த ஒரு வெற்றியை இரண்டாம் பாகம் கொடுத்ததா என்று கேட்டால் அது சந்தேகம் தான் என்று சொல்ல வைத்து விட்டார்கள்.
டிமாண்டி காலணி 2 – குதிரை வேகம் எடுத்து ஆமை வேகத்தில் முடித்து விட்டார்கள்…