இயக்குநர் அமீரின் புதிய படம்

பெரு மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய திரைத்துறை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,
என் மீது அன்பு கொண்டு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன உங்கள் அத்தனை உள்ளங்களுக்கும் இயக்குனர் அமீரின் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்.
இந்த மகிழ்வான தருணத்தில் எனது திரைப்பயணத்தின் அடுத்த முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
எனது, ”அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன்” நிறுவனமும் – ”JSM பிக்சர்ஸ்” நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தின் “PHOTO SHOOT”, இன்று (05.12.2021) தொடங்குகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி –சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
”மெளனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின் ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார்.
கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, மக்கள் தொடர்பு நிகில் ஆகியோரின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை, ”அதர்மம்”, ”பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ்கிருஷ்ணன் இயக்குகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நானும், யுவன் ஷங்கர் ராஜாவும், ராம்ஜியும், சினேகனும் இணைந்து இத்திரைப்படத்திற்காக பணியாற்ற உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமீர் தெரிவித்துள்ளார்.