Enemy – திரைப்படம் விமர்சனம்
Enemy : ஊர் பிரச்சனைக்காக தன் மனைவியை பறிகொடுத்த தம்பி ராமையா தனது மகன் சோழனை (விஷால்) எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விடாமல் பள்ளிப்பருவத்தில் இருந்தே அவனது கவனம் படிப்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் இன்றைய குற்றவாளிகள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பதால் தனது மகனை திறமையான காவல்துறை அதிகாரியாக கொண்டு வரவேண்டும் என பல்வேறு பயிற்சிகளை தனது மகன் ராஜீவ் (ஆர்யாவுக்கு) பள்ளிப் பருவத்திலிருந்தே கற்றுத்தருகிறார். அவரது பயிற்சியின் மீது ஈர்க்கப்பட்டு சோழன் ராஜீவுடன் நண்பனாக பழகுகிறான். போட்டி இருந்தால் தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் என்பது பிரகாஷ்ராஜின் நம்பிக்கை. அதிபுத்திசாலிகளான விஷாலும் ஆர்யாவும் தந்தையின் கனவை நிறைவேற்றினார்களா? இல்லை எதிர்மறையாக மாறி ஆபத்தான எதிரிகளாக மோதிக் கொண்டார்களா? என்பது தான் எனிமி
படத்தின் கதை.
ஆர்யா: தனது இரு தொடர் வெற்றிக்கு பிறகு வெளியாகும் மூன்றாவது படம் தான் இந்த எனிமி. அதுவும் வில்லன் கதாபாத்திரம். பணம் ஒன்றே நோக்கம் என ஈவு,இரக்கமின்றி பணத்துக்காக திட்டமிட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி,எந்த விதமான தடயமுமின்றி கொலை செய்யும் சர்வதேச கிரிமினல் ஆக ஆர்யா தன்னுடைய தனித்துவ நடிப்பில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். விஷாலுடன் இவர் மோதும் காட்சி நம் நரம்புகளை முறுக்கேற செய்கிறது. இனி இவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் குவிய வாய்ப்பிருக்கிறது.
விஷால்: ஹீரோயிச காட்சிகளிலும், தந்தை மீது பாசத்தைப் பொழியும் காட்சியாக இருந்தாலும், கருணாவுடன் சேர்ந்து காமெடி காட்சிகளிலும், மிர்நாலினியுடனான காதல், ஆடல், பாடல் என அனைத்து காட்சிகளிலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். விஷால் சண்டைக் காட்சிகளில் மட்டும் 200% உழைத்திருக்கிறார். காட்சிகளில் நம்பகத்தன்மை சற்று குறைவாக இருப்பதால் முழுமையாக காட்சிக்கு காட்சி கைத்தட்டி விசிலடித்து ரசிக்க முடிவதில்லை. காட்சியில் நம்பகத்தன்மை கூடியிருந்தால் இரும்புத்திரையின் வசூலை தாண்டி இருக்கும் இந்த எனிமி.
மிர்நாளினி ரவி : அவருக்கான கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் பெரிதாக இல்லை. வழக்கமாக ஆக்ஷன் படங்களில் வரும் கதாநாயகிகள் போலவே இதிலும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மம்தா மோகன்தாஸ் இவருடைய கதாபாத்திரமும் அதேபோல்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தம்பி ராமையா: இவரைத் தவிர வேறு எந்த நடிகராலும் இந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்க முடியாது என்று உறுதியாக சொல்லும்படி நடித்திருக்கிறார். வெகுளித்தனமான தந்தையாக, தான் சொல்வதையெல்லாம் தன் மகன் கேட்டு நடப்பதாக புரிந்துகொண்டு பின்னர் தன் மகனை பற்றிய உண்மை தெரிய வரும் போது தன் எண்ணம் தவறு என்று உணர்ந்து, மகனை ஊர் மக்களுக்காக போராட சொல்லும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
பிரகாஷ் ராஜ்: தனது பிள்ளைக்கும் விஷாலுக்கும் பல்வேறு விதமான பயிற்சியைத் தருவதை பார்க்கும்போது, நமக்கு இப்படி ஒரு தந்தை இல்லையே என ஏக்கப்பட வைத்துவிடுகிறார் தன் நடிப்பின் மூலமாக.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் முதல்பாதியில் கதை சொன்ன விதமும் திரைக்கதையில் இருந்த வேகமும் இரண்டாவது பாதியில் தொடர்ந்திருந்தால் இவர் மிகப்பெரிய வெற்றியை ருசித்து இருப்பார். உச்ச இயக்குனருக்கான அத்தனை திறமையும் இவரிடமிருந்தும் காட்சிகளில் ஏதோ ஒன்று திரையில் குறைந்ததாகவே சொல்லத்தோன்றுகிறது. இரு உச்ச நடிகர்கள் கிடைத்தும் முழுமையாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை தவற விட்டிருப்பது நமக்கும் ஏமாற்றமளிக்கிறது.
ஒளிப்பதிவாளர் R.D ராஜசேகரின் ஒளிப்பதிவும் கலை இயக்குனர் ராமலிங்கத்தின் கலைநயத்துடன் கூடிய உழைப்பும் ஒவ்வொரு காட்சிக்கும் நிறைவைத் தருகிறது. பின்னணி இசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் நிறைய உழைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் வேகமாக நகர்த்த இவரது பின்னணி இசை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. உலகத்திலேயே ஆபத்தான எதிரி நம்மை பற்றி எல்லாம் தெரிஞ்ச நம் நண்பன் தான் என்ற கருத்தை வலியுறுத்துகிறது இந்த படம். அப்படிப்பட்ட ஒரு எதிரியை நாம் உருவாகக் கூடாது என நினைத்தால் இந்த படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கலாம்.