சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின்
முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், ” இந்தப்படத்தில் சூர்யா சாருடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என்பதால் மிகுந்த தயக்கத்துடன் இருந்தேன். சூர்யா சார் இயல்பாக பேசி அந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க உதவினார். அவர் ‘நடிப்பு நாயகன்’ என்பதால், நெருக்கமான காட்சிகளிலும் எளிதாக நடிக்க கற்றுக் கொடுத்தார். ” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ” நான் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த நாயகனுக்கும், படத்தின் நாயகி பட்டம் வழங்கியதில்லை. ஆனால் சூர்யா போன்ற அழகான நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பிரியங்கா மோகன், ‘நடிப்பு நாயகன்’ என பட்டம் கொடுத்திருக்கிறார். நானும் இதுவரை ஏராளமான நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் ஆனால் ஒருபோதும் இதுபோன்ற பட்டத்தை எனக்கு வழங்கியதில்லை. ஆனால் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களுக்கு பட்டத்தை வழங்கியதை பார்த்திருக்கிறேன். ஏராளமான சுவர்களில் ‘வள்ளல் சூர்யா’ என்று எழுதி இருப்பார்கள். எங்கள் வீட்டுப்பிள்ளை சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பெரியாரின் தொண்டன் என்பதால், அது தொடர்பான ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள சென்றேன். அப்போது நான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர்,‘ சார் இதெல்லாம் ரிஸ்க். நீங்கள் மேடையேறி ஏதாவது பேச, அது படத்தின் பிசினசுக்கு நெகட்டிவா போய்விடும். அது மட்டுமல்ல உங்கள் மார்க்கெட்டே போய்விடும்’ என்றார். அப்போது அவரிடம், ‘மார்க்கெட் போனாலும் பரவாயில்லை. நான் பெரியாரின் தொண்டன் என்பதை ஒருபோதும் மறுக்க மாட்டேன். மறக்கமாட்டேன். நிச்சயம் அந்த விழாவில் கலந்து கொள்வேன்’ என்றேன். இன்று சூர்யாவின் படங்களில் தொடர்ச்சியாக பெரியாரின் புகைப்படங்களும், அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் பெரியார், அம்பேத்கார் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பார். எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. இந்தப்படத்தில் வினய் அவர்களின் வில்லத்தனத்தை பார்த்துவிட்டு சூர்யா ரசிகர்களுக்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். பொருத்தமான கதாபாத்திரம் அமைந்தால் நான் மீண்டும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஏனெனில் ஒரு தலைமுறைக்கே நான் வில்லன் நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டது. தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், அட்டகாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ” சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை விட, படம் மிகச் சிறப்பாக இருக்கும். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பிறகு – கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் மேடையேறி இருக்கிறேன். சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில், ‘எங்கள் சூர்யா அண்ணனை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தனர். அப்போது, ‘மாஸான கிராமிய பின்னணியிலான குடும்ப சென்டிமென்ட் கலந்த ஸ்கிரிப்ட் ஒன்று தயாராக இருக்கிறது’ என சமூக வலைதளத்தில் பதிலளித்தேன். அப்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய சமூக வலைதள பதிவை கவனித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், உடனடியாக சூர்யாவை சந்தித்து, அந்த படைப்பையும் எங்கள் நிறுவனம் சார்பில் உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டனர்.
ஒரு நல்ல திரைக்கதை, தனக்கான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து கொள்ளும் என்பார்கள். அந்த வகையில்தான் சூர்யா முதல் அனைவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்தனர். அவர்களும் தங்களது உழைப்பை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இப்படத்தின் கிளைமாக்சை மட்டும் விமர்சனத்தில் குறிப்பிடவேண்டாம். அதனை படம் பார்க்கும் ரசிகர்களிடமே விட்டுவிடுங்கள். இதனை ஒரு அன்பு வேண்டுகோளாகத்தான் முன்வைக்கிறேன். ” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ” இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.
நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ தயாராகியிருக்கிறது.
ஏனைய படங்களின் படப்பிடிப்பு போலல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவிட் காரணமாக மறக்க முடியாததாக இருந்தது. வழக்கமான படப்பிடிப்பை போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும், படப்பிடிப்பு தளம் முழுவதும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பிறகு வேலை செய்தனர். படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடைநிலை ஊழியர் முதல் அனைவருக்கும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முழு அக்கறையுடன் பேணி பாதுகாத்தனர். திருவிழா காட்சி படமாக்கும் போதும் இதனை முறையாக பின்பற்றினர்.
இந்தப்படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காவிடம் ‘காக்க காக்க’ படத்தை பார்த்த போது உங்கள் வயது என்ன? எனக் கேட்டேன். அவர் ‘மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்’ என்றார். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய ரசிகையாக இருந்த பெண், தற்போது எனக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு ஏராளமாக இருக்கிறது. பழைய மூடநம்பிக்கைகளாக இருக்கலாம். பழகிக் கொண்ட வசதிகளாக இருக்கலாம். சௌகரியங்களாக இருக்கலாம். இது போன்றவற்றை இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.
கோவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகாலம் அனைத்தும் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. எல்லா விசயத்திலும் எல்லை தாண்டி சிந்திக்காதீர்கள். உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ..! அதை மட்டும் கேளுங்கள்.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ், நான் 2டி எனும் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தவர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை விவரிக்கும் முன்னர் என்னிடம், ‘உங்கள் ரசிகனாக இருந்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன்’ என சொன்னார். அப்போதுதான் அவருடைய மனதில் எந்த உயரத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சொல்கிறேன், ‘இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்’. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
‘ஜெய்பீம்’ பட வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றது. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. அனைவரும் அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டனர். ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர். இதையும் நான் பார்த்தேன். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.” என்றார்.