கருடன் – விமர்சனம் 3.5/5

 கருடன் – விமர்சனம் 3.5/5

இயக்கம்: துரை செந்தில் குமார்

நடிகர்கள்: சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர் வி உதயகுமார், வடிவுக்கரசி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஆர்த்தூர் எஸ் வில்சன்

படத்தொகுப்பு: ப்ரதீப் இ ராகவ்

தயாரிப்பு: கே குமார்

கதைப்படி,

சசிகுமாரும் உன்னி முகுந்தனும் சிறுவயதில் நண்பர்களாக இருக்கிறார்கள். அப்போது, தாய் தந்தை இல்லாமல் கோவிலில் தஞ்சம் புகுந்த சூரிக்கு அடைக்கலம் தருகிறார் உன்னிமுகுந்தன். மூவரையும் தனது பிள்ளைகளாக நினைத்து வளர்த்து வருகிறார் வடிவுக்கரசி.

உன்னி முகுந்தனுக்கு விசுவாசியாக வருகிறார் சூரி. தொடர்ந்து, வருடங்கள் உருண்டோட, சசிகுமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உன்னி முகுந்தனுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாமலும் இருக்கிறார்.

தொடர்ந்து, உன்னி முகுந்தனுக்கு வலது கரமாக இருக்கிறார் சூரி. அதே ஊரில் இருக்கும் கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராகவும் வருகிறார் வடிவுக்கரசி. கோவில் நிர்வாகம் இவர்களின் மூவரின் கைகளில் இருக்கிறது.

கோவில் சொத்தான பல கோடி மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்த, கோவிலில் இருக்கும் பழைய செம்பு தகட்டை எடுக்க முயற்சிக்கிறது அமைச்சராக வரும் ஆர் வி உதயகுமார் குரூப்.

இந்த விவகாரத்தால், சசிகுமாருக்கும் உன்னி முகுந்தனுக்கும் இடையே பகை அதிகரிக்கிறது. இந்த பகையால் நாயகன் சூரி தனது நிலைப்பாட்டை விஸ்வாசம் பக்கத்திற்கு திருப்பினாரா அல்லது நியாயத்தின் பக்கத்திற்கு திருப்பினாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சூரி, சொக்கன் கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருக்கிறார். விடுதலை படத்தில் தோன்றிய கதாபாத்திரத்திற்கு இணையாக ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் சூரி. நாயகனுக்கான கதை என்று இல்லாமல் கதைக்கான நாயகனாக நடித்து ஜொலித்திருக்கிறார்.

வேறு எந்த நடிகராலும் இப்படியொரு உழைப்பைக் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி என பல கோணங்களில் தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லாமல் தனது உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். சுமார் 4 இடங்களில் மிக நீளமான வசனத்தை சரளமாக பொறிந்து தள்ளும்போது “நீ நடிகன்யா நடிகன்யா….” என்று சொல்ல வைத்துவிட்டார்.

நடிகர் சசிக்குமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு, காட்சிகளை பங்கீட்டு கொள்கின்றனர் இருவரும். மண்ணின் நாயகனாக சசிக்குமார் களம் இறங்கி விளையாடியிருக்கிறார்.

முதல் பாதியில் உன்னி முகுந்தன் கதையோடு ஒன்றாமல் தனித்து நின்றாலும், இரண்டாம் பாதியில் டாப் கியர் போட்டு கிளப்பியிருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்த சஸ்பென்ஸ் காட்சிகள் ரசிக்க வைத்தது.

யுவனின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. அதிலும் இடைவேளைக் காட்சியில் வைக்கப்பட்ட பிஜிஎம் மிரள வைத்துவிட்டது. பாடல்கள் ஓகே ரகம் தான்.

வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக நிற்கிறது. அதிலும், ஆக்‌ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட நால்வரும் தங்களது கேரக்டர்களை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், வடிவுக்கரசி தனது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து தனது கேரக்டரில் நிலைத்திருக்கிறார்.

முக்கியமான கேரக்டரில் கருடன் படத்தின் திருப்பு முனையாக நடித்து மிரட்டியிருக்கிறார் யோகிராம்.

தமிழ் சினிமாவில் நட்புக்காக வந்த படங்களில் இப்படம் ஒரு தனித்துவமாக தலைத்து நின்று வெற்றி கண்டிருக்கிறது “கருடன்”.

கருடன் – வென்றான்.

Related post