செஞ்சி விமர்சனம்

 செஞ்சி விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது . ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

கதைப்படி,

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டில் தங்க வருகிறார். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.

அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள்.

அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.

ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

அதுமட்டுமின்றி, படம் முழுக்க ஆங்கில வசனங்கள் வருவது கொஞ்சம் படத்தின் மீதான கவனத்தை குறைகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். நடிப்பும் சிறப்பு.

படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் தர்சன் குமார்மாஸ்டர் விதேஷ் ஆனந்த்மாஸ்டர் சஞ்சய். பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.

படத்தில் நடித்துள்ள நடிகர்களை விடவும் படத்துக்குப் பெரிதாகப் பலமாக அமைந்துள்ளது படத்தில் வரும் லோகேஷன்கள் தான்.

பெரும்பாலும் கல்லார் காட்டுப்பகுதியில் படமாகி உள்ளது .கதைப்படி செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என்று நிகழ்விடங்கள் வருகின்றன.

ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டுக்கள் அழகிய காட்சிகளை ஒளிப்பதிவு செய்து நம்மை வியக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வழக்கம்போல காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்ற எந்த மசாலா அம்சமும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது பெரிய ஆறுதல்.

நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது. குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை ரசிக்கலாம்.

செஞ்சி – வரலாற்றை நினைவூட்டும் படம்.

Related post