க்ளாஸ் மேட்ஸ் விமர்சனம்

 க்ளாஸ் மேட்ஸ் விமர்சனம்

இயக்கம்: குட்டிப்புலி சரவண சக்தி

நடிகர்கள்: அங்கையர் கண்ணன், ப்ரானா, குட்டிப்புலி சரவண சக்தி, மயில்சாமி, சாம்ஸ், அபி நக்‌ஷத்ரா,

இசையமைப்பாளர்: ப்ரித்வி

ஒளிப்பதிவு: அருண் குமார் செல்வராஜ்

தயாரிப்பு: முகவை பிலிம் இண்டர்நேஷ்னல்

தயாரிப்பாளர்: அங்கையர் கண்ணன்

கதைப்படி,

குடும்பஸ்தர்களான அங்கையர் கண்ணன் மற்றும் சரவண சக்தி இருவரும் நண்பர்கள். அங்கையர் கண்ணனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களே ஆகிறது. பத்து வயதில் பெண் குழந்தையுடன் அழகான குடும்பம் இருக்கிறது சரவண சக்திக்கு.

இருவரும் நீண்ட வருடங்களாக க்ளாஸ் மேட்ஸ்களாக இருந்து வருகின்றனர். ஒன்றாக படித்தவர்கள் அல்ல, ஒன்றாக குடிப்பவர்கள்…. எது எப்படியாகினும் தினசரி குடிப்பதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

தினசரி குடித்து வந்தாலும், தன் கணவன் மீது தீராத பாசத்தை வைத்திருக்கிறார் நாயகி ப்ரானா. குடியால் மனைவி ப்ரானா மீது சந்தேகப்பட்டு அவரையும் தாக்கி விடுகிறார்.

குடியை விட்டு திருந்தி வாழ்ந்து வந்த மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்து விடுகின்றனர் கண்ணனும் சக்தியும். இதனைத் தொடர்ந்து ஏற்படும் விபத்தில் மயில் சாமி இறந்து விடுகிறார்.

அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் அங்கையர் கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மனைவி மீது அன்பு செலுத்திவிட்டு மீண்டும் மீண்டும் அந்த மதுவை கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதே திரை பகிர்வு சரவண சக்திக்கும் இருக்கிறது. குடும்பத்தில் தனது மனைவி மீது ஒருவன் தப்பான பார்வையில் பார்த்துவிட்டதை அறிந்தும் மீண்டும் அந்த மது பழக்கத்தை விடாமல், அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை….

படத்தின் இறுதிவரை மதுப்பழக்கம் தொடர்ந்து கொண்டே வருவதும் படத்தின் இறுதியான க்ளைமாக்ஸில் மட்டும் திருந்துவதை என்னவென்று சொல்வது….

ஒரு சில இடங்களில் நாடகத்தன்மை இருந்ததை கவனித்திருந்திருக்கலாம். பின்னணி படத்திற்கு சற்று ஆறுதல். ஒளிப்பதிவிலும் எந்த குறையும் இல்லை.

அயலி படத்தில் தனது நடிப்பின் முத்திரையை நிரூபித்திருந்த அபி நக்‌ஷத்திரா இப்படத்தில் பெரிதான ஸ்கோப் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், க்ளைமாக்ஸில் முத்திரைப் பதித்திருக்கிறார்.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது போல், நடிப்பில் டாப்பில் வந்து நிற்கிறார் நாயகி ப்ரனா. மனைவியாக கணவன் மீது பாசம் வைப்பதில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் நச்சென ஸ்கோர் செய்திருக்கிறார்.

மயில்சாமியின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது.

எதுவாகினும், குடிப்பழக்கத்தால் குடும்பங்களை சீரழிவதை இப்படத்தின் மூலமாக கண்முன்னே கொண்டு வந்ததற்காக இயக்குனர் சரவண சக்திக்கு ஆகப்பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

க்ளாஸ் மேட்ஸ் – சரக்கு அதிகம் போதை குறைவு – 2.5/5

Related post