ஹிட் லிஸ்ட் – விமர்சனம் 3.25/5

 ஹிட் லிஸ்ட் – விமர்சனம் 3.25/5

இயக்கம்: சூர்யகதிர் காக்கல்லர் – கே கார்த்திகேயன்

நடிகர்கள்: சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்‌ஷத்ரா, அனுபமா குமார்

ஒளிப்பதிவு: ராம் சரண்

இசை: சி சத்யா

தயாரிப்பு: ஆர் கே செல்லுலாயிட்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: கே எஸ் ரவிக்குமார்

கதைப்படி,

நாயகன் விஜய்கனிஷ்கா, அவரது தாய் சித்தாரா மற்றும் சகோதரி அபி நக்‌ஷத்ரா மூவரும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் கனிஷ்காவிற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து சித்தாரா மற்றும் அபி நக்‌ஷத்ராவை கடத்திவிட்டதாக கூறுகிறார்.

உடனே, விஜய் கனிஷ்கா போலீஸ் உயரதிகாரியான சரத்குமாரிடம் செல்கிறார். ஏற்கனவே விஜய் கனிஷ்கா தெரிந்தவர் என்பதால் வழக்கை கூடுதல் கவனம் கொண்டு விசாரிக்க ஆரம்பிக்கிறார் சரத்குமார்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இருக்கும் போது, அம்மா மற்றும் தங்கையை உயிரோடு விடவேண்டும் என்றால் வட சென்னையில் மிகப்பெரும் ரெளடியாக இருக்கும் ராமச்சந்திர ராமை (கே ஜி எஃப் வில்லன்) கொலை செய்ய வேண்டும் என்று அந்த மர்ம நபர் கூறிவிடுகிறார்.

எந்த உயிர்க்கும் தீங்கு நினைக்காத விஜய் கனிஷ்கா, கொலை என்றதும் அஞ்சுகிறார். தனது குடும்பத்திற்காக அந்த ரெளடி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை கொலையும் செய்து விடுகிறார்.

இதோடு நின்றுவிடாமல் அந்த மர்ம நபர் மேலும் ஒரு கொலை செய்ய சொல்கிறார். யார் அந்த மர்ம நபர்.? எதற்காக அந்த கொலையை செய்ய சொல்கிறார்.?? என பல திருப்பங்களுடன் இரண்டாம் பாதி நகர்கிறது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய மிகப்பெரும் இயக்குனர் விக்ரமின் மகன் தான் இந்த விஜய் கனிஷ்கா. தனது அறிமுக படத்திலேயே மிகப்பெரும் நடிகராக வருவதற்குறிய அனைத்துத் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் விஜய் கனிஷ்கா. தனது கடினமான உழைப்பைக் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என இரண்டு கோணத்திலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். விஜய் கனிஷ்கா கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

போலீஸ் உயரதிகாரியாக வரும் சரத்குமார், இப்படத்தில் நன்றாகவே தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார். அதிலும், சண்டைக் காட்சி ஒன்றை மிரட்டலாக செய்து முடித்திருக்கிறார். இருந்தாலும் இன்னும் இவரது கதாபாத்திரத்தை வலுப்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

சித்தாரா மற்றும் அபி நக்‌ஷத்ரா இருவரும் தங்களுக்கான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகளை வாங்குகிறார்கள்.

கதைக்கான கரு இரண்டாம் பாதியில் கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நடந்த மனிதம் பற்றிய கதை மூலமாக எடுத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். சவாலான கதையை மிகவும் நேர்த்தியான திரைக்கதைக் கொண்டு இயக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவும் இரண்டும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. அதிலும் சரத்குமாரின் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு விளையாடியிருக்கிறது.

சூர்யகதிர் காக்கல்லர் – கே கார்த்திகேயன் இரண்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், மனிதத்தைப் பற்றிய புரிதலை வெளிக்காட்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹிட் லிஸ்ட் – சூப்பர் ஹிட்..

Related post