காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

 காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

ஸ்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “காலங்களில் அவள் வசந்தம்”. ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியிருக்கிறார். கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்திவ் வர்கீஸ், லொள்ளுசபா சாமிநாதன், RJ விக்னேஷிகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை வாசிப்போம்.

கதைப்படி,

சினிமாவில் காட்டும் காதல் மற்றும் ரோமன்ஸ் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார் ஷாம் (கௌசிக்). ஆனால், அதற்கு எதிர்மறையாக யதார்த்த வாழ்க்கையையும் காதலையும் விரும்புபவர் ராதே(அஞ்சலி). இவர்கள் இருவருக்கும் திருமணமாகிறது. சில நாட்கள் வாழக்கை அழகாக நகர்கிறது.

ஷாம் பற்றி எந்த உண்மையும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்ட ராதேவுக்கு. ஷாமின் டைரி கிடைக்க அவரின் முன்னாள் காதலிகளின் பட்டியலையும். சினிமா தனமான காதலையும் அறிந்துக் கொள்கிறார் ராதே. இதன் பின் இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் வர. இருவரும் இணைந்தார்களா? யதார்த்த கணவனாக மாறினாரா ஷாம்? இல்லை இவர்கள் இருவரும் பிரிந்தார்களா? என்பது படத்தின் அழகான இரண்டாம் பாதி.

படத்தின் முதல் காட்சியில் நம்மை ஈர்த்து இருக்கையில் அமரவைத்தது இசை தான். இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அவர்களுக்கு தனி பாராட்டுகளும் வாழ்த்துக்களும். நிச்சயம் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது.

கதைக்களமும் திரைக்கதையும் ஏதோ ஒரு காட்சியிலாவது நம்மை திரையில் உணர முடியும். பீல் குட் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். படத்தின் தலைப்பிற்கேற்ப “வசந்த காலம்”, “இலையுதிர் காலம்” போன்று பல காலங்களை குறிப்பிட்டு திரைக்கதையமைத்தது காதல் கதைக்கு புதுமை. வசனங்களும் அற்புதம்.

ஒளிப்பதிவாளர் கோபியின் காட்சியமைப்பு ரசிக்கும் ராகம்.

நியாயமாக இந்த படத்திற்கு தான் “ராதே ஷ்யாம்” என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் “காலங்களில் அவள் வசந்தம்” சிறந்த தலைப்பு. க்ளைமாஸ் மட்டும் கதையை போல் யதார்த்தமாக இருந்திருந்தால் முழு திருப்தி கிடைத்திருக்கும்.

கௌசிக் ராமின் நடிப்பு முதல் படம் என்பதை எங்கும் காட்டவில்லை. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இவரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

அஞ்சலி நாயரின் நடிப்பு படத்திற்கு படம் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். RJ விக்னேஷின் அளவான நடிப்பும், அழுத்தமான வசனமும் படத்திற்கு பலமாக அமைந்தது.

காலங்களில் அவள் வசந்தம் – காதலின் அழகும் யதார்த்தமும் – (3/5).

Related post