கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

அருள் நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனீஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் சை.கௌதமராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “கழுவேத்தி மூர்க்கன்”.
எதை பேசுகிறது இப்படம்?
இரு வேறு சாதி மக்களுக்கிடையே இருக்கும் போராட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமான ஒரு கதையையே இப்படம் பேசியுள்ளது.
கதைப்படி,
எதையும் யோசிக்காமல் எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் மூர்க்க சாமியும் (அருள்நிதி), எந்த பிரச்சனை வந்தாலும் அதை பொறுமையாக கையாளும் பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர்.
இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? பூமியை கொன்றது யார்? மூர்க்கசாமி இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
மிடுக்கான தோற்றத்துடன் ஆக்ஷனில் அதகளம் செய்து கிராமத்து இளைஞராக கலக்கியிருக்கிறார் அருள்நிதி.
முதல் பாதி முழுவதும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் செய்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார் சந்தோஷ் பிரதாப். அவரின் பாத்திர வடிவமைப்பு, அவரின் நடிப்பு என அனைத்தும் ரசிக்கும் ரகம்.
முதல் பாதியில் கதையே நகரவில்லை என்றாலும், நம்மை ரசிக்க வைத்து படத்தின் மீதான கவனத்தை வைத்தது அருள்நிதிக்கு, துஷாராவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் தான். கிராமத்து பெண்ணாக அழகியாக வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் துஷாரா.
வழக்கமான ஒரு கதையை கையிலெடுத்து, வித்யாசமான க்ளைமாக்ஸ் தர முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சை.கௌதமராஜ். திரைக்கதையில் புதுமை காட்டினால் மட்டுமே இனி வெளியவாவிற்கும் சாதி படங்கள் பார்க்கும் ரகத்திலாவது இருக்கும்.
இல்லையென்றால் இதெல்லாம் காலாவதியான கதைகளின் பட்டியலில் சேரும்.
படத்தின் முதல் பாதியில் பெரிதாக கதையை பேசவில்லை என்றாலும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார் இயக்குனர் கௌதமராஜ்.
ஏற்கனவே இசையமைத்த சில டியூன்களை மீண்டும் இப்படத்தில் பின்னணியாக அமைத்திருக்கிறார் டி.இமான்.
வழக்கமான ஒரு சாதி படம், இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்களுக்கிடையே கிளம்பும் பிரச்சனை. அதற்கு காரணமாக அமையும் அரசியல்வாதிகள், என வழக்கமான ஒரு படம் தான் “கழுவேத்தி மூர்க்கன்”.
கழுவேத்தி மூர்க்கன் – அரைத்த மாவு – (2.75/5)