Kuthiraivaal – திரைப்படம் விமர்சனம்

 Kuthiraivaal – திரைப்படம் விமர்சனம்

யக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் தான் ”குதிரைவால்”. வித்தியாசமான கதைகளத்தோடு போஸ்டரில் ஆரம்பித்து ட்ரெய்லர் வரை புரியாத புதிராக இருந்த மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதற்கான விடை கிடைத்ததா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.கதைப்படி,அதிகாலைப் பொழுதில் கனவில் இருந்து எழுகிறார் கலையரசன். விழிக்கும் போதே குதிரைவாலோடு எழுகிறார்.எப்படி தனக்கு வால் முளைத்தது என்ற காரணத்தை தேடி அலைகிறார் கலையரசன். தன் கனவுகளிலேயே தனக்கு வால் முளைத்த காரணமும் இருப்பதாக எண்ணி ஒரு குறிசொல்லும் பாட்டி, ஒரு ஜோசியர் மற்றும் ஒரு கணக்கு வாத்தியார் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்கிறார்.மறந்து போன கனவை ஞாபகப் படுத்த சொல்லும் பாட்டி, உலகத்துல இருக்க எல்லா பிரச்சினைக்கும் கணக்குல தீர்வு இருக்கென சொல்லும் கணக்கு வாத்தியார் என அனைவரும் படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கின்றனர்.படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மிலும் பல அடுக்குகளில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது. தற்கால சினிமா வகைமைகளில் புதிய வகைமையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் குதிரைவால் ஒரு முக்கியமான திரைப்படம்.ஒற்றை கதை சொல்லல் தன்மையை விடுத்து படம் நெடுகிலும் பல்வேறு கிளைக்கதைகள் வால் போல முளைத்துக்கொண்டே இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.கதையில் வரும் கனவுத்தன்மை, கற்பனையில் உருவாகும் உலகம், காட்சிகளி்ன் படிமங்களின் இருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் எனப் பல காரணிகள் முழுக்க நம் மூளையை ஆக்கிரமித்து பெரும் கவனத்தை கோருகிறது.ஒரு காட்சியின் முழுச்சாரத்தை அறிந்துகொள்ள பலமுறை திரும்ப பார்க்க தூண்டும் தன்மையுடைதாக இருந்தாலும் நம்முள் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே படத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வால் முளைத்த பிறகு வாலின் அசைவுக்கு ஏற்றார் போல கலையரசன நடிப்பு சிறப்பு.தமிழக அரசியலைப்போலவே எம்.ஜி.ஆர் பெயர் படம் முழுதும் தவிர்க்க முடியாத வடிவாக வருகிறது.பெரும் தனி இலக்கியத்திற்கு உண்டான அனைத்து கூறுகளுடன் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ் .இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்.கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது.
கலை இயக்குனர் ராமு தங்கராஜ் ஒவ்வொரு இடத்திலும் ஓவிய அழகை காட்சிகளில் அடுக்கி உள்ளார்.Non -Linear கதைசொல்லலில் படத்தொகுப்பில் ஒரு புதிய வடிவத்தை அமைத்து பார்வையாளர்களுக்கு பெருங்கதையை எளிதாக்கி 2 மணிநேர படமாக கொடுத்துள்ளார் எடிட்டர் கிரிதரன்.பிண்ணனி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஃப்ராய்டின் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.பாடகர் பிரதீப் குமார் இசையப்பாளராகவும் தமிழ் சினிமா உலகில் முக்கிய இடம் பிடிப்பார்.

நீலம் ப்ரொடக்சன்ஸ் – பா.இரஞ்சித் வெளியீடு
தயாரிப்பு -யாழி பிலிம்ஸ் தயாரிப்பாளர் – விக்னேஷ் சுந்தரேசன்
இயக்குனர்கள் – மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்
கதை,திரைக்கதை,வசனம் – G. இராஜேஷ்
ஒளிப்பதிவாளர்-கார்த்திக் முத்துகுமார்
படத்தொகுப்பு – MKP கிரிதரன்
பின்னணி இசை -பிரதீப் குமார்,மார்டின் விஸ்ஸர்
பாடல்கள் இசை -பிரதீப் குமார்
ஒலி வடிவமைப்பாளர் – அந்தோனி BJ ரூபன்
கலை இயக்குனர் – ராமு தங்கராஜ்

நடிகர்கள் – கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி, ரவிந்திரா விஜய், பிரதீப் K விஜயன், KSG வெங்கடேஷ், SD பாலகுமாரன், ஸ்வேதா டோரதி, அன்னபூரணி

குதிரைவால் – புத்திசாலிகள் பார்க்க வேண்டிய படம் 

 

Related post