லியோ – விமர்சனம்

 லியோ – விமர்சனம்

லியோ – விமர்சனம் 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க லலித்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”. விஜய் படங்களிலே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படமானது இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

கதைப்படி,

இமாச்சல் பிரதேசத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறது விஜய் – த்ரிஷா தம்பதி. கேக் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார் விஜய். சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரியாக வரும் கெளதம் மேனன் விஜய்யின் நண்பராக வருகிறார்.

இந்நிலையில், மிஷ்கின் தலைமையிலான ரெளடி கும்பல் இக்கட்டான சூழலில் இமாச்சல் பிரதேசதில் சிக்கிக் கொள்கிறது. கையில் பணம் இல்லாததால், பணத்தை கொள்ளையடிக்க விஜய்யின் கேக் ஷாப்பிற்குள் நுழைந்து விடுகிறார்கள் மிஷ்கின் கும்பல்.

அப்போது, விஜய்க்கும் மிஷ்கின் கும்பலுக்கும் ஏற்படும் தகராறில் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய். போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின் மிஷ்கின் கும்பல் ரெளடியினர் என்று அறிந்து விஜய்யை விடுதலை செய்கிறது நீதிமன்றம்.

அப்போது, விஜய்யின் புகைப்படம் நாளிதழ்களில் வர, இதை பார்க்கும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஷாக் ஆகிறார்கள். இறந்து போனவர் எப்படி உயிரோடு இருக்கிறார் என்று.

விஜய்யை தேடி தெலுங்கானாவில் இருந்து தனது படைபலத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு செல்கிறார் சஞ்சய் தத்.

விஜய் யார்.? எதற்காக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் விஜய்யை தேடுகிறார்கள்.?? த்ரிஷாவை சந்திக்கும் முன் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

மொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து இறங்கி அதகளம் செய்திருக்கிறார் விஜய். பார்த்திபனாகவும் லியோவாகவும் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை தரமாக கொடுத்திருக்கிறார். படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.

முதல் பாதியில் குடும்ப செண்டிமெண்ட் கொஞ்சம் இருந்தாலும், பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார்கள். ஆக்‌ஷனுக்கு மட்டுமே மிக அதிகமாக முக்கியத்தும் கொடுத்து படத்தினை எடுக்க திட்டமிட்டிருந்தார்கள் போலும்.

விஜய்யின் மனைவியாக த்ரிஷா, தன் பங்கிற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து முடித்திருக்கிறார். மூடநம்பிக்கையை சற்று முக்கியமான கண்டெண்டாக கையில் எடுத்து படத்தின் நடுவில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

லியோவின் சகோதரியாக நடித்த மடோனாவின் கதாபாத்திரம் சற்று சஸ்பென்சாக இருந்தது படத்தின்பலம்.

கார் சண்டைக் காட்சி, கேம் விளையாடுவது போல் இருந்தது. அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் அமைதியாக ஏறும் கதையானது இரண்டாம் பாதியில் அதே இடத்தில் நின்று விட்டது.

இரண்டாம் பாதியிலும் விஜய் இறங்கி அதகளம் செய்திருந்தால், நிச்சயம் லியோ பெரிதாக நம்மை கவர்ந்திருந்திருக்கும்.

அனைத்து படத்திலும் தனது இசையால் ரசிகர்களை கட்டிப் போட்ட அனிருத், இப்படத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். அவருக்கான ஸ்கோப் இப்படத்தில் சற்று மிஸ்சிங் தான்.

மனோஜ் பரமஹன்சாவின் ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில்

லியோ – கர்ஜனை கம்மி தான்.. – 3/5

Related post