சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் ; இயக்குனர் லிங்குசாமி ஆதங்கம்

 சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் ; இயக்குனர் லிங்குசாமி ஆதங்கம்

ஒடியன் டாக்கீஸ் சார்பில் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குனர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் லிங்குசாமி :

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது.

தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.

வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்.

இயக்குனர் வேலுதாஸ் :

சினிமாவில் நீண்ட நாட்களாக பயணித்து வருகிறேன். அதனால் என்னை ஒரு இயக்குனராக்கி பார்க்கவேண்டும் என்பதற்காக இந்தப்படத்தை தயாரிப்பாளர் அண்ணாதுரை ஆரம்பித்தார். படம் ஆரம்பித்தவுடன் சரி.. அதன்பிறகு ஒரு நாள்கூட அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததே இல்லை.. முழுப்பொறுப்பையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டார்” என்று கூறினார்.

Related post