மழை பிடிக்காத மனிதன் விமர்சனம் – (3/5);
விஜய் ஆண்டனி, சரத் குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தனஞ்செயா மற்றும் பலர் நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில், ஆச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி வெளியாகியுள்ள படம் “மழை பிடிக்காத மனிதன்”.
கதைப்படி,
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்கிறார். அவரைப் பழி வாங்கும் நோக்கில் சலீம் மற்றும் அவரது மனைவி தியா செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்.
இந்த நிகழ்வில், அமைச்சரிடமிருந்து சலீமைக் காப்பாற்ற, சலீம் இறந்ததாகப் பொய் சொல்லி, அவரை அந்தமானிலுள்ள ஒரு தீவு நகரில் விட்டுச் செல்கிறார் சலீமின் நண்பரான சரத்குமார். அந்தமானில் அடையாளமற்று வாழப் பழகும் சலீமிற்கு, பர்மா, சௌமியா என்ற இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள்.
இந்நிலையில், இருவருக்கும் அந்நகர தாதாவான டாலியாலும், காவல்துறை அதிகாரியான சுர்லாவாலும் பிரச்சனைகள் வர, அதைச் சரி செய்யக் களமிறங்குகிறார் சலீம். இதனால் அடையாளத்தை மறைத்து வாழும் சலீமிற்கு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன, அவற்றை எப்படிச் சமாளித்தார் போன்ற கேள்விகளுக்குப் பதில் தான் படத்தின் இரண்டாம் பாதி.
குழப்பமான கதைக்களத்துடன், தேவையற்ற ட்விஸ்ட்களுடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். சலீம் என்ற நபர் ஒரு ஏஜென்ட் என சொல்லி ட்ரெண்டிற்கு வர முயற்சித்திருக்கிறார் விஜய் மில்டன்.
ஆனால், சண்டை காட்சிகள், பிரச்சனை ஆரம்பிக்கும் மையப் புள்ளி, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுமை கொடுத்து கதை நகர்த்திய விதம் சிறப்பான விஷயம்.
இருந்தபோதும், கணிக்கப் படும் விதத்தில் அமைந்திருக்கும் திரைக்கதை படத்திற்கு ஒரு குறையாக உள்ளது.
தனியாளாக கதையை சுமக்க தவறிவிட்டார் விஜய் ஆண்டனி, ஆனால் இதற்கு முந்தைய படங்களை விட இப்படத்தில் மிக அழகாகவும் நடிப்பில் சற்று அனுபவத்தையும் கையாண்டுள்ளார். லாங் ஹேர் கெட்டப் அவருக்கு பொருத்தமாகவே இருந்தது.
மேகா ஆகாஷ், ப்ருத்வி அம்பார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் அனைவரும் கதையையும் அவர்களின் பாத்திரத்தையும் உணர்ந்து நடித்தது படத்திற்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம்.
ஆனால் அனைத்து கதாபாத்திரங்களை விட படத்தில் வரும் நாய் நம் கவனத்தை ஈர்த்தது. ஒரு எலிமெண்ட்டாக மட்டும் இல்லாமல், நாய்க்கும் கதை சுமையை கொடுத்ததற்கு விஜய் மில்டனுக்கு பாராட்டுக்கள்.
சரத் குமார், சத்ய ராஜ் ஆகியோரின் பாத்திரங்கள் தேவையா? என்று கேள்விகள் இருந்தாலும் அவர்களை பெரும் பாதி தவிர்த்து விட்டதால் கதையை சோர்வடையாமல் இருக்க செய்தது.
படத்தின் பாடல்கள் மற்றும் இசை ஓகே ரகம். இந்த வாரத்தில் வெளியான படங்களின் வெற்றி வரிசையில் “ஜமா”, “பேச்சி” படங்களை தொடர்ந்து “மழை பிடிக்காத மனிதன்” படமும் இணைந்துள்ளது.
மழை பிடிக்காத மனிதன் – அழியாதவன்.