’நித்தம்’ புகைப்படக் கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

 ’நித்தம்’ புகைப்படக் கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் கடந்த 17-ஆம் தேதி ’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி தொடங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சியில் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கும் பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் நித்தம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, “இது எனக்கு இதுவரையிலும் கிடைக்காத ஒரு பெரும் வாய்ப்பு. இங்கே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகைப்படமும் வலியினால், சோகத்தினால் உருவான கலைப்படைப்புகளாக தான் நான் பார்க்கிறேன். அனைத்து புகைப்படங்களும் ஆழ்ந்த உள்அர்த்தத்தோடு, மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு மனித அவலத்தின் சுமையை சொல்கிறது. அனைத்து புகைப்படங்களும் ஒரு மிகப்பெரிய இனத்தின் வலியை சொல்கிறது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களுமே உலகின் எந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றாலும் முதல் இடத்தை பிடிக்கும் அந்த அளவிற்கு அவைகள் சிறப்பாக உள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சியாக தான் நான் பார்க்கிறேன். இந்த கண்காட்சி பார்ப்பவர்ள் எல்லாருடைய இதயத்தையும் தொடும். இந்த கண்காட்சியில் தங்களது புகைப்படங்களை வைத்துள்ள அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Spread the love

Related post

You cannot copy content of this page