பார்க்கிங் விமர்சனம்

 பார்க்கிங் விமர்சனம்

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹிந்துஜா நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சாம்.சி.எஸ். இசையில் உருவாகியுள்ள படம் “பார்க்கிங்”.

கதைப்படி,

நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞன் (ஹரிஷ் கல்யாண்) கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் புதிய காரை வாங்குகிறார். ஆனால், அந்த காரை நிறுத்த இடம் இல்லாமல் ஹவுஸ் ஓனர் ஆன எம் எஸ் பாஸ்கர் உடன் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் இருவரும் போட்டி போட்டு யார் முதலில் வீட்டிற்கு வருகிறார்களோ அவர்களே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் இந்த பிரச்சனை காமெடியாக வளர ஆரம்பிக்க. நாளடைவில் இந்த பிரச்சனையை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு செல்கிறார் ஹரிஷ் கல்யாண். கடைசியில் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்ததா? இல்லையா? என்பது தான் பார்க்கிங் படத்தின் மீதிக் கதை.

ஹரிஷ் கல்யாணின் கேரியர் பெஸ்ட் இந்த பார்க்கிங் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. அவர் தேர்வு செய்த கதை, அவர் கதாபாத்திரமாக வாழ்ந்த விதம், அவரின் நடிப்பு என ஹரிஷ் கல்யாணை பாராட்ட பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார் ஹரிஷ்.

பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து வியந்திருந்தாலும் இந்த படத்தில் அவரின் கதாபாத்திரமும் பாத்திர வடிவமைப்பும் புதுமையே. அவரின் நடிப்பு வழக்கம் போல் க்ளாஸ் தான்.

ஹிந்துஜா, இளவரசு, ரமா என உடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ராம்குமாரின் கதை தேர்வு பாராட்ட வேண்டிய ஒன்று. பலரும் கதைக்கு பஞ்சம் பட்டு பல படங்களின் ஓன்-லைனை வைத்து புதிய திரைக்கதை வடிவமைத்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து கதையமைத்து வெற்றி பெற்றுள்ளர் இயக்குனர் ராம் குமார்.

வாகனம் வைத்திருக்கும் அனைவரும் படத்தில் வரும் பல காட்சிகள் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்தி பார்க்க கூடியவையாகவே திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.

முதல் பாதியை சுவாரஸ்யமாகவும், யதார்த்தமாகவும் வடிவமைத்த ராம்குமார். இராண்டாம் பாதியை சினிமா பாணியில் வடிவமைத்தது சற்று ஏமாற்றம் தான்.

படத்திற்கு முக்கிய பலம் சாம்.சி.எஸ்-ன் இசை தான். கதையின் சுவாரஸ்யத்தையும் உயிரோட்டத்தையும் அழகாக பயணிக்க வைத்திருக்கிறார் சாம்.

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. பாடல்கள் கேட்கும் ரகம்.

பார்க்கிங் – மக்களின் பிரச்சனை  – (3.25/5)

Related post