பரோல் விமர்சனம் 

 பரோல் விமர்சனம் 

ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா கணேஷ், மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், மக் மணி, ஜானகி நடிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில் மதுசூதனன் தயாரித்து வெளியிட்டுள்ள படம் ‘பரோல்’.

கதைப்படி,

கரிகாலன் (லிங்கா), கோவலன் (ஆர்.எஸ்.கார்த்திக்) அண்ணன் தம்பி. இவரின் தாய் தான் ஜானகி. சிறுவயதில் தன் அம்மாவை ஒருவர் தப்பாக பார்த்த காரணத்தால் அவரை அடித்துவிட்டு கண்களை குருடாக்கிய காரணத்தால் சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு செல்கிறார் கரிகாலன். அங்கு நடக்கும் சில கசப்பான சம்பவங்களால் மூவரை கொலை செய்து மேலும் 6 வருடம் சிறைவாசம் வாழ்கிறார் கரிகாலன்.

வெளியே வந்த கரிகாலனுக்கு யாரும் வேலை தராத நிலையில் தொடர் கொலைகள் செய்து சம்பாதிக்கிறார். மேலும், தன் காதலியை ஒருவர் மணந்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் அவரை கொலை செய்து சரண்டர் ஆகிறார் கரிகாலன்.

ஆனால், அம்மாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பான மகனாகவும். தனது அம்மா அண்ணன் மீது அதீத பாசம் வைத்திருக்கும் காரணத்தால் அண்ணனை வெறுக்கும் ஒருவராகவும் வளம் வருபவர் கோவலன்.

திடீரென ஒருநாள் தாய் ஜானகி இறந்து போக இளையமகன் கோவலன் இறுதி சடங்குகளை செய்ய ஆயத்தமாகிறார். ஆனால், அண்ணன் செய்வது தான் முறை என்று உறவினர்கள் கட்டளையிட வேறுவழியின்றி கரிகாலனை பரோலில் எடுக்க ஏற்பாடு செய்கிறார் கோவலன். அதுமட்டுமின்றி, தன் அண்ணனை கொலை செய்யும் நோக்கமும் அவருக்குண்டு.

அண்ணனை பரோலில் எடுத்தாரா? கரிகாலனை கொன்றாரா கோவலன்? அம்மாவுக்கு கொல்லி வைத்தது யார்? கரிகாலனின் பகையாளிகளின் திட்டம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை படத்தின் இரண்டாம் பாதி.

இதற்கு முன்னதாக “என்னங்க சார் உங்க சட்டம்” படத்தில் நாயகனாக நடித்து அனைவரின் மனத்திலும் இடம் பிடித்திருப்பார் ஆர்.எஸ்.கார்த்திக். அதே போல் தான் இப்படத்திலும். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்ற ஏக்கமும். அண்ணன் மீதுள்ள வெறுப்பை எப்போதும் வெளிக்காட்டும் ஒருவராக நேர்த்தியான நடிப்பை நடித்திருக்கிறார் ஆர்.எஸ்.கார்த்திக்.

“சேதுபதி” படத்தில் துணை நடிகராக மக்கள் மனதில் பதிந்தவர் லிங்கா. இப்படத்தில் மாஸ் ஹீரோவாக கலக்கியிருக்கிறார். மேலும் சிகரம் தொடுவார் என உறுதியான நம்பிக்கையை தரக்கூடிய நடிப்பு.

அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என நிரூபித்துள்ளார்.

அக்கா, சித்தி, அம்மா என உறவுமுறை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான வினோதினி. சமீபத்தில் வெளியாகும் படங்களில், போலீஸ், டாக்டர், நீதிபதி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். அதே போல், இப்படத்திலும் வக்கீலாக நடித்து படத்தில் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறார் வினோதினி.

இசை மேலும் சிறப்பாக இருந்திருக்கலாமோ? என்ற எண்ணம்.

துவாரக் ராஜா கதையை அழகாக அமைந்திருந்தாலும் இவ்வளவு வன்மம் தேவையா? சில ஆபாச வார்த்தைகளும், காட்சிகளும் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தால் அனைத்து வயது தரப்பினர்களும் படத்தை பார்த்திருக்கலாமே. சில காட்சிகளை நீக்கி, நரேஷனில் பயணித்திருந்தால் A சான்றிதழை தவிர்த்திருக்கலாம். மற்றபடி கதையும் களமும் சுவாரஸ்யம் தான்.

ரியல் ஆக்ஷன் காட்சியை ரசிக்கும் ஆடியன்ஸ் இப்படத்தை தேர்வு செய்யலாம்.

பரோல் – கண்டிஷ்னல் பெய்ல் – (2.5/5)

Spread the love

Related post

You cannot copy content of this page