விழாவில் அழக்கூடாது என்று நினைத்தேன் – ‘பத்து தல’ விழாவில் சிலம்பரசன்

 விழாவில் அழக்கூடாது என்று நினைத்தேன் – ‘பத்து தல’ விழாவில் சிலம்பரசன்

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இவ்விழாவில்நடிகர் சிலம்பரசன் பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதில், “நான் இங்கு வரும்போது எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அது நான் அழக்கூடாது என்பதுதான். நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர். அப்படி இருக்கும்பொழுது ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக தான். இவ்வளவு நாள் எல்லா கஷ்டத்தையும் பார்த்தாகி விட்டது. அந்த கஷ்டத்தை எல்லாம் எனக்காக பார்த்த நீங்கள் இனிமேல் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த சோகம் எல்லாம் முடிந்து விட்டது.

இந்த நேரு ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு நிறைய முறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மற்றவர்களுக்காக கூடிய கூட்டத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக என்னை நேசிக்கும் ரசிகர்களை நேரில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு நான் மனதளவில் மிகவும் அமைதியாக இருந்தேன். சினிமா எல்லாம் வேண்டாம் ஆன்மீகம் பக்கம் போகலாம் என்று வீட்டிற்குள்ளேயே இருந்தேன். அப்பொழுதுதான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார். கன்னட படமான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். இந்த படத்தை அங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ் அண்ணா நடித்திருப்பார். அவரை போல் எப்படி நடிக்க முடியும் என்று யோசித்தேன். பிறகு இந்த படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் கௌதம்தான்.

இங்கு தட்டிக் கொடுப்பதற்கு தான் ஆள் இல்லை, தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு தட்டி கொடுக்க இத்தனை நாள் வரை இருந்தது ரசிகர்கள் மட்டும்தான். கௌதம் கார்த்திக் ஒரு திறமையான நல்ல மனிதர். எனக்கு இந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அவருடைய உழைப்புக்கு நிச்சயம் மிகப்பெரிய இடத்தை இது வாங்கி கொடுக்கும். இந்த படம் நான் ஒத்துக்கொண்ட பொழுது மிகவும் குண்டாக இருந்தேன். அது அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தது. பின்புதான் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடந்தது.

‘மாநாடு’ படம் வெளியானது. பிறகு மீண்டும் ‘பத்துதல’ படத்துக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது நான் நினைத்திருந்தால் தயாரிப்பாளரை கூப்பிட்டு பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் இப்பொழுது வேறு லைனில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்பொழுதும் என் நினைவுக்கு வந்தது கௌதம் தான். அவருக்காக இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் உள்ளே வந்தேன். அப்பொழுது இயக்குநர் என்னிடம் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார். நான் அதை செய்து விடுவேன்! ஆனால் பார்ப்பவர்கள் சிம்பு மீண்டும் உடல் எடை அதிகரித்து ஷூட்டிங் வராமல் போய்விடுவான் என்று எழுதி விடுவார்கள், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து பார்த்த பொழுது அது செட்டாகவில்லை.

பின்பு 108 கிலோ உடல் எடை அதிகரித்து இப்பொழுது குறைத்தேன். ‘மீண்டும் உன்னை ரசிகர்கள் திரையில் எதிர்பார்த்து இருக்கும்பொழுது, ரசிகர்களுக்காக மீண்டும் அதிகரித்த உடல் எடையை உன்னால் குறைக்க முடியாதா’ என்று எனக்கு தோன்றியது. பிறகு உடல் எடை அதிகரிக்க கிருஷ்ணாவிடம் சம்மதம் தெரிவித்தேன். என்னுடைய வயதுக்கு இது மெச்சூர்டான ஒரு கதாபாத்திரம்தான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை கொடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்து ‘சூர்யா 42’, ‘தங்கலான்’ ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

என்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்திலேயும் எனக்கு துணை கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் துணை இல்லை. அது பிரச்சனை இல்லை! எனக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ‘தம்’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா என்னுடன் ஒரு படம் இயக்க வேண்டி இருந்தது. அப்பொழுது அது நடக்கவில்லை. அப்பொழுது கிடைத்திருந்தாலும் அவருக்கு ஒத்ததல தான் கிடைத்திருக்கும். இப்பொழுது, ‘பத்து தல’ கிடைத்து இருக்கிறது. அடுத்தது என்னுடைய காட்ஃபாதர் ரஹ்மான் சார். அவர் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நிச்சயம் நடந்து கொள்வேன். இதுவரை 50 படங்கள் நடித்து முடித்து இருக்கிறேன்.

ஆனால் எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கும் வராத என் அம்மா அப்பா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்கள் தான். அதற்கான ஏற்பாடுகளை அத்தனை சிரத்தை எடுத்து செய்து கொடுத்தவர்களுக்கு நன்றி. முன்பெல்லாம் அதிரடியாக எனர்ஜியாக பேசுவேன். அது இப்பொழுது என்னுடைய பேச்சில் இல்லை அமைதியாக பேசுகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். அது உண்மைதான்! அதற்கு காரணம் என்னவென்றால், அந்த நேரத்தில் எனக்கு தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை. என்னுடைய ரசிகர்களை தவிர வேறு யாரும் அப்பொழுது இல்லை, எனக்கு நானே துணை நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அதனால்தான் அப்படி கத்தி பேசினேன். அது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஊக்கம் தான். அதனால்தான் 39 கிலோ என்னால் குறைக்க முடிந்தது. பிறகு ‘மாநாடு’ படம் வெளியாகி வெற்றியடைந்து, ‘வெந்து தணிந்தது காடு’ வந்து, இப்பொழுது ‘பத்து தல’ படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி இருக்கும்பொழுது எப்படி நான் கத்த முடியும் பணிந்து தான் பேச முடியும். என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக தான் படத்தை முடித்துவிட்டு மூன்று மாதம் சென்று மறுபடியும் உடல் எடை குறைத்து இப்பொழுது வந்து நிற்கிறேன்.

இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல் மட்டும் தான். ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே தான். ஒவ்வொரு நாளும் நம்மை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு நாட்கள் ரசிகர்கள் எனக்காக கஷ்டப்பட்டது போதும். கூலாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு இனிமேல் என்னை ரசியுங்கள். நான் திரும்ப வந்துவிட்டேன்.

வேற மாதிரி வந்திருக்கிறேன். விடவே மாட்டேன். நம் தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமை பட வைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அது எனக்கும் நிச்சயம் உண்டு. உங்களுடைய தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் நீங்களாகவே இருங்கள். இதுதான் என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது” என்று கூறிய சிம்பு மேடையில் ‘லூசுப்பெண்ணே’ பாடலைப் பாடி நடனம் ஆடினார்.

 

Related post