எனக்கு கிடைத்த அடையாளம் “களவாணி”; எனது பெருமை “பட்டது அரசன்” – துரை சுதாகர்;
தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய ‘களவாணி 2’ படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர்.
அவர் இப்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் .
களவாணி 2 படத்தின் நடித்த பின் எனக்குப் அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன. என்னை “களவாணி” துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள்.
அதற்காக இயக்குநர் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் நன்றி கூறுவதில் என்னுடைய மன உணர்வைக் கூறிவிட முடியாது.
இப்போது நான் “பட்டத்து அரசன்” படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பு.
மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும், தான் உணர்ந்த விஷயங்களைப் படமாக்குவது என்பதில் கொள்கையாக வைத்திருக்கும் சற்குணம் இயக்கி இருக்கிறார் அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது பெருமை.
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில், தேசிய விருது பெற்ற இயக்குநரின் இயக்கத்தில், இவ்வளவு நட்சத்திரங்கள் மத்தியில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பட்டத்து அரசன் கதை கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பக் கதை அமைப்பு கொண்ட படம்.
நடித்த அனுபவத்தை நினைத்து மகிழும்படியான நல்ல தருணங்கள் இந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தன. இந்தப் படத்தில் நான் ராஜ்கிரண் அவர்களின் பையனாக நடித்திருப்பேன்.
அவருடன் நடிக்கும் போது எனக்கு முதலில் சற்று தயக்கமாகவும் மிரட்சியாகவும் இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட மனப் பதற்றத்துடன் நடித்தால் சரியாக நடிப்பு வராது என்பதை அவர் உணர்ந்து கொண்டு முதல் நாளே என்னுடன் இயல்பாக பேசினார்.
கதாநாயகன் சகோதரர் அதர்வாவும் மிகவும் சகஜமாகப் பழகினார் அவர் ஒரு நட்சத்திரத்தின் பிள்ளை என்கிற எந்த விதமான எண்ணமும் இல்லாமல் அனைவரிடம் பழகியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்படித்தான் அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அன்புடனும் சகஜமாகவும் பழகினார்கள்.
இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்த போது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.
எப்போதுமே இயக்குநர் சற்குணம் கதைக்கேற்ற முகங்களைத்தான் தேடுவார். அப்படித்தான் இதிலும் அனைவரையும் பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து நடிக்க வைத்தார். அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பார்.
எனவே நான் பெரிதாக நடித்தேன் என்று சொல்வதை விட அவர் அப்படி வடிவமைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே, என்னைப் போலவே அவரும் மேலும் மேலும் வளர வேண்டும் பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். அவருக்கு இந்த நேரத்தில் மனம் நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன், என்றார்.