ரகு தாத்தா – விமர்சனம் – 2.5/5
இயக்கம்: சுமன் குமார்
நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன்
ஒளிப்பதிவு: யாமினி யக்ஞமூர்த்தி
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: ஹோம்பாலே ஃபிலிம்ஸ்
கதைப்படி,
ஹிந்தி எதிர்ப்பு காலகட்டத்தில் கதை நகர்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவராக வருகிறார் எம் எஸ் பாஸ்கர். இவரின் பேத்தியாக வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரும் ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருபவர்.
அதுமட்டுமல்லாமல், பெண்ணியம், பெரியார் கொள்கை என தனது குரலை எங்கும் ஓங்கி ஒலிக்கக் கூடியவராக வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், கதாசிரியரும் கூட. இவருடைய எழுத்தில் புத்தகங்கள் பலவும் உருவாகின்றன. திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் தொடர்ந்து திருமணத்தை தவிர்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவரை ஒருதலையாக காதலித்து வருகிறார் ரவீந்தர் விஜய். இந்த சமயத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு கேன்சர் இருப்பது குடும்பத்திற்கு தெரியவர, குடும்பத்தினர் அதிர்ச்சியாகின்றனர்.
தனது கடைசி ஆசையாக பேத்தி கீர்த்தியின் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார் எம் எஸ் பாஸ்கர்.
இதனால், வேறு வழியின்றி தன் புத்தக வாசிப்பாளரும் நண்பருமான ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் கீர்த்தி.
பெற்றோர்கள் சந்தோஷமடைய, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் ரவீந்தரின் மற்றொரு முகம் கீர்த்திக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு கீர்த்தி என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகி கீர்த்தி சுரேஷ் மீது தான் படத்தின் மொத்த கதையும் பயணிக்கிறது. ஆரம்பத்தில் கீர்த்தியின் நடிப்பு எரிச்சலை கொடுத்தாலும், மெதுவாக செல்ல செல்ல கதைக்குள் நம்மை இழுத்துச் சென்று விட்டார் கீர்த்தி சுரேஷ்.
ஹிந்தி திணிப்பு, காமெடி சீன்கள் என பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததில் கீர்த்தியின் நடிப்பு பெரும் பலமாக இருந்திருக்கிறது.
தனது அனுபவ நடிப்பால் பல இடங்களில் கைதட்டல் தட்டும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
ரவீந்தரின் நடிப்பையும் பெரிதாகவே பாராட்டலாம். ஆரம்பத்தில் நல்லவனாக எண்ட்ரீ ஆவதும் பின் அதே முகம் வேறொரு வடிவமாக நமக்கு தெரிவதும் என நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
மேலும், ப்ரியதர்ஷினி, கீர்த்தி சுரேஷின் அண்ணனாக வருபவர், அண்ணியாக வருபவர், டாக்டராக வந்தவர், என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே கேரக்டர்களாகவே மாறியிருந்தனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்த யாமினி யக்ஞமூர்த்தி மிக துல்லியமான ஒளிப்பதிவை கொடுத்திருந்தார். அதிலும், கீர்த்தி சுரேஷ் மீது சற்று அதிகமான வெளிச்சம் கொடுத்து அவரை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை பெரும் பலம். திரைக்கதை தொங்கும் இடங்களிலெல்லாம் தனது பின்னணி இசையால் படத்தை சற்று தாங்கி பிடித்திருக்கிறார் ஷான் ரோல்டன். பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் தான்.
ஹிந்தி திணிப்பு, பெண்ணியம் என கூற வந்த கதையில் கால் வைத்த இயக்குனர் அதை கொடுக்கும் இடத்தில் நன்றாகவே தடுமாறியிருக்கிறார். எங்கு காமெடி வைக்க வேண்டும், எங்கு காட்சிகளின் வலுவை ரசிகர்களிடத்தில் கொடுக்க வேண்டும் என்று கூறும் இடத்தில் இயக்குனர் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.
ரகு தாத்தா – தாத்தாக்கள் கதற விடும் காலம் போல இது…