முத்திரை பதித்த காந்தாரா; புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்!!

 முத்திரை பதித்த காந்தாரா; புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்!!

“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம். இந்நிலையில் இப்படத்தினைக் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய ட்வீட்டரில்,“தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது. என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும், இந்த படம் தமிழகத்தில் இன்றும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page