சாலா விமர்சனம் – 3/5
இயக்கம்: எஸ் டி மணிபால்
நடிகர்கள்: தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன், ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன்
ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு
இசை: தீசன்
கலை: வைரபாலன்
படத்தொகுப்பு: புவன்
தயாரிப்பு: பீப்பிள் மீடியா ஃபேக்டரி
கதைப்படி,
வட சென்னையில் பிரபல மதுபானக் கூடம் ஒன்றிற்காக, இரு துருவங்களாக வரும் சார்லஸ் வினோத் மற்றும் அருள் தாஸ் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர்.
இதனால், அம்மதுபான கூடத்தினை மூடி சீல் வைத்து விடுகிறது காவல்துறை. எப்படியாவது அந்த மதுபானக் கூடத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் இருவரும்.
இதில், அருள்தாஸிடம் சிறு வயதில் இருந்தே விசுவாசியாக இருந்து வருகிறார் சாலா (தீரன்). அருள்தாஸுக்காக தனது உயிரையும் கொடுக்கும் அளவிற்கு அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார் தீரன்.
இச்சமயத்தில் தேர்தல் வர, இருவருக்கும் இருக்கும் பகையானது இன்னும் அதிகமாக, மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர்.
மதுவுக்கு எதிராகவும், மது அருந்தினால் அவர்களது குடும்பம் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறார் நாயகி ரேஷ்மா.
இதனால், தீரனுக்கும் ரேஷ்மாவிற்கும் அவ்வப்போது முட்டிக் கொள்கிறது. இருந்தாலும், தீரனின் இரக்க பார்வை ரேஷ்மாவை ரசிக்க வைக்கிறது.
மதுபானக் கூடம் தான் தனது வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் இவர்களின் கதை என்ன.?? மதுவுக்கு எதிரான ரேஷ்மாவின் போராட்டம் என்னவானது என்பதே சாலா படத்தின் மீதிக் கதை.
நாயகன் தீரன், சாலா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமாக இருக்கிறார். அவரது எண்ட்ரீ காட்சியில் வாழை இலை முழுவதும் ப்ரியாணி வைத்து சாப்பிடும் காட்சியில் பிரமாண்டமாக தெரிகிறார்.
இவர் 100 பேரை கூட அடிப்பாரே என்று சொல்லும் அளவிற்கு நல்லதொரு உடற்கட்டோடு இருக்கிறார். ஒரு சில இடத்தில் அழும் காட்சிகளிலெல்லாம் நமது கண்களிலும் ஈரம் எட்டிப் பார்க்கும்படியான நடிப்பைக் கொடுத்து அசத்தி விட்டார் நாயகன் தீரன்.
நாயகி ரேஷ்மா படத்திற்கு மிகப்பெரும் பலம். பட்டாசு வெடிப்பது போல இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டை சுழற்றுகின்றன.
மதுவுக்கு எதிராக இவரது போராட்டம் ஒவ்வொன்றும், இப்படியான தமிழகத்தைத் தானே மக்கள் விரும்புகிறார்கள் என்றெண்ண வைத்து விடுகிறார் ரேஷ்மா.
அருள்தாஸ் மற்றும் சார்லஸ் வினோத் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதற்கான சரியான தேர்வு. இருவருமே அக்கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கின்றனர்.
ஒரு அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை சரிவரவே செய்து முடித்திருக்கிறார். இருந்தாலும் விழிப்புணர்வை காட்டிலும் மதுவின் காட்சி சற்று தூக்கி பிடித்து விட்டதால் ஆங்காங்கே சற்று முக சுழிவை ஏற்படுத்திவிட்டது.
மதுவினால் குடும்பங்கள் எப்படியான அழிவை சந்திக்கிறது என்பதை கூறியதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் ஒருசேர கைகொடுத்திருக்கிறது.
சாலா – மதுவுக்கு எதிரான போராட்டம்…