சஞ்ஜீவன் விமர்சனம் 

 சஞ்ஜீவன் விமர்சனம் 

வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் அறிமுக இயக்குனர் மணி சேகர் இயக்கியிருக்கும் படம் தான் சஞ்ஜீவன்.

கதைப்படி,

வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள். நாயகன் வினோத் ஸ்னூக்கர் விளையாட்டில் எப்படி வெளிகிறார்? என்பது முதல் பாதியும்.

நண்பர்கள் அனைவரும் இணைந்து வினோத்தின் பிறந்த நாளை கொண்டாட ஏற்காடு செல்கின்றனர். செல்லும் இடத்தில் அங்கு என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாதியுமாக. 5 நண்பர்களின் 4 மாத யதார்த்த வாழ்க்கை தான் படத்தின் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் அனைவரும் நேர்த்தியான நடிப்பையும் நண்பர்களுடனே நாம் இருப்பது போல் ஒரு உணர்வையும் நடிப்பின் மூலம் தருகின்றனர்.

ஒவ்வொரு கேரக்டரும் தனித்துவத்தோடு இருந்தது படத்தின் ஓட்டத்திற்கு பெரும் பலமாக இருந்தது..

திரைக்கதை வசனம் இரண்டும் படத்தில் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படுத்தவில்லை. பெரிதான கதை எதுவும் இல்லை என்றாலும் படத்திற்கான உயிரோட்டத்தை எந்த இடத்திலும் சிதறாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர். இருந்தாலும் இரண்டாம் பாதியில் கவனத்தை அதிகம் காட்டியிருக்கலாமோ என்ற எண்ணம்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் சொர்ண குமார் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகவும் அழகான காட்சி அமைப்போடும் கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டினை இவ்வளவு நேர்த்தியாக யாரும் இதுவரை கொடுத்ததில்லை என்று தான் கூற வேண்டும். ஸ்னூக்கர் டோர்னமெண்ட் கேமராக்கள் கூட இவ்வளவு அழகாக விளையாட்டை காட்சி படுத்துமா? என்பது சந்தேகமே.

அழகான உயிரோட்டமாக வாழ்வியலை கொடுத்து நம்மை படத்தோடு ஒன்றி நடைபோட வைத்த இயக்குனர் மணி சேகருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

சஞ்ஜீவன் – 5 நண்பர்களும் 4 மாத பயணமும் – (3/5)

Related post