செங்களம் திரைவிமர்சனம்

கலையரசன், வாணி போஜன், ஷாலி, விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடிப்பில் உருவான தொடர் “செங்களம்”. அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜீ5 ஓடிடி தளம் வெளியிட்டிருக்கிறது.
எதை பேசுகிறது இந்த தொடர்?
ஒரு அரசியல் நாற்காலிக்காக நடக்கும் போட்டியும், அதில் நடக்கும் துரோகத்தையும், ஒரு அரசியல் களம் எப்படி செயல்படும் என்பதையும், பதவி என்னும் போதை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யத்தூண்டும் என்பதையும் மிக தெளிவாக, தைரியமாக பேசியுள்ளது.
கதைப்படி,
சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது.
ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார் என அடுத்தடுத்து பல திருப்பங்களை கொண்டத்துதான் இந்த செங்களம்.
நடிப்பை பற்றி பேசவேண்டும் என்றால், கிட்டதட்ட ஒரு 50 நட்சத்திரங்களின் பெயரை பட்டியலிட்டு பேசவேண்டும்.
அதனால், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிலரை பற்றி பேசுவோம். ஆனால், நினைவுகொள்ளுங்கள் அனைவரும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
முதலில், வாணி போஜன் பற்றி பேச வேண்டும். வாணி போஜன் என்பதை விட சூரியகலா என்ற பெயர் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு அவரின் கதாபாத்திரம் வலுவாக இருக்கும். மேலும், அவரின் நடிப்பு முந்தைய படங்களில் அவர் நடித்திருந்தார் என்று குறிப்பிடலாம். ஆனால், இப்படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
கலையரசன், ராயர் என்ற பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். அவரின் கோபம், ஆதங்கம், காதல் என அனைத்தும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இத்தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ளார் ஷாலி. அவருக்கு கொடுக்க பட்டிருக்கும் கதாபாத்திரம் மிகவும் வலுவான ஒன்று. ஆனால், மிகவும் தேர்ச்சி பெற்ற நடிகை போலும், பழம்பெரும் நடிகைகள் போலும் அவர் மிகவும் எதார்த்தமாக நடித்து கைதட்டல்களை பெறுகிறார்.
எஸ்.ஆர்.பிரபாகரனின் தைரியத்தை பாராட்ட வேண்டும். ஏனெனில், கடந்த 50 ஆண்டுகால அரசியலையும், முக்கிய புள்ளிகளையும், சில பிரபலமான அரசியல் வசனங்களையும் வைத்து இத்தொடரை இயக்கியுள்ளார். இவர் இந்த கதையை படமாக எடுத்திருந்தால் வெளியாகியிருக்குமா? என்பது சந்தேகமே.
மேலும், அவர் தேர்வு செய்த நடிகர்களின் பட்டியல் அவரின் பாதி வெற்றியை தீர்மானித்து விட்டது. மீதி வெற்றி தான் அவர் திரைக்கதை நகர்த்திய விதம். ஒவ்வொரு எபிஸோடிலும் சுவாரஸ்யம், திருப்பங்கள் என மிகவும் சிறப்பு.
என்னதான் ஓப்பனிங் நல்லாருந்தாலும், பினிஷிங் சரி இல்லை என்பது போல, இந்த தொடரில் பினிஷிங்கே இல்லை. ஆமாங்க, சரியான முடிவை இவர் தராதது சிறிது ஏமாற்றம் தான்.
இது குறித்து அவரிடம் நேரடியாக வினவிய போது, இரண்டாம் பாகம் எடுப்பதாக இருக்கிறோம் என்று பதிலளித்து விட்டார்.
க்ளைமாக்ஸ் தவிர்த்து இத்தொடரை பார்த்தால் மிகவும் யதார்த்தமான பொலிடிகள் த்ரில்லர் தான் “செங்களம்”.
தரனின் இசை பல இடங்களில் நம்மை டான்ஸ் ஆட தூண்டுகிறது. சிறப்பான இசையமைத்து தொடருக்கு பலமாக அமைந்துள்ளார்.
செங்களம் – சதுரங்க வேட்டை – – (3.5/5)