டக்கர் விமர்சனம்

 டக்கர் விமர்சனம்

சித்தார்த் மற்றும் திவ்யன்ஷா யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் நடிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “டக்கர்”.

எதை பேசுகிறது இப்படம்?

பணத்தை நோக்கி ஓடும் ஹீரோவையும், பணத்தை விட்டு ஓடும் ஹீரோயினையும் ஒன்றிணைத்து அவர்களின் சிக்கல்களையும், பணத்தால் வரும் நிறை குறைகளையும் கம்மியாக பேசியுள்ளது இப்படம்.

கதைப்படி,

தன் வாழ்க்கையை தான் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பணக்கார வீட்டுப் பெண் தான் நாயகி திவ்யன்ஷா. அதிகமான சொத்து கொண்ட ஒருவருக்கு தனது பெண்ணைக் கொடுக்க திட்டமிடுகிறார் திவ்யன்ஷாவின் தந்தை.

இந்த திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் திவ்யன்ஷா. ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து நிற்கிறார் திவ்யன்ஷா. இவரை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார் ரெளடியாக வரும் அபிமன்யு சிங்.

பணம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது என்று, பணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் தான் சித்தார்த் நடித்துள்ள பாத்திரம்.

ஒருகட்டத்தில், பணத்திற்காக ஓடும் சித்தார்த்தும் பணமே வேண்டாம் என்று ஓடும் திவ்யன்ஷாவும் காரில் சந்தித்துக் கொள்ள இவர்களது பயணம் தொடர்கிறது.

திவ்யன்ஷாவை சுற்றி நடக்கும் பிரச்சனைகளை சித்தார்த் எப்படி எதிர்கொண்டார்.? இருவருக்கும் காதல் உண்டானதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆக்ஷன், செண்டிமெண்ட், ரோமன்ஸ் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் சேர்த்துள்ளார் சித்தார்த். ஹீரோயினை ரசிக்கும் போதெல்லாம் அவருக்கு ஏற்படும் உணர்வுகளை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார் சித்தார்த்.

கதை, திரைக்கதை, பாடல்கள் என எது நம்மை ரசிக்க வைத்ததோ இல்லையோ, படு கிளாமராக வந்து இளசுகள் முதல் பெருசுகள் வரை கவர்ந்துள்ளார் திவ்யன்ஷா கௌஷிக்.

படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான அபிமன்யு சிங்-ன் இன்ட்ரோ காட்சி மிரட்டலாக இருந்தாலும், அவருடன் இருக்கும் குட்டி வில்லன்கள் அவரை டம்மி செய்து விட்டனர்.

யோகி பாபு இப்படத்தில் காமெடி செய்துள்ளாரா? என்பது சந்தேகமே. அவருக்கே டப் கொடுக்கும் அளவிற்கு காமெடி என்ற பெயரில் கடுப்பேத்தியுள்ளார் விக்னேஷ் காந்த்.

படத்தின் இரண்டாம் பாதி, கார் பயணம் மற்றும் ரவுடிகளின் சேஸிங் காட்சிகளால் நிறைந்துள்ளது. இது “பையா” படத்தின் காட்சிகளையே நம் நினைவுக்கு கொண்டுவந்தது. இருப்பினும், சுவாரஸ்யம் குறையாமல் நம்மை படத்துடன் கனெக்ட் செய்ய வைத்தது தான் இயக்குனர் கார்த்திக் அவர்களுக்கு கிடைத்த வெற்றி.

இரண்டாம் பாதியில், காதல், சேஸிங் என நம்மை திருப்தி படுத்திய இயக்குனர், முதல் பாதியில் என்னதான் நடக்குது என்ற அளவிற்கு நம்மை குழப்பத்தில் விட்டுவிட்டார். முதல் பாதியில் வரும் யோகி பாபுவின் காட்சிகளை குறைத்தால் படத்தின் ஓட்டம் சற்று வேகம் எடுக்கும்.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு நம்மை ரோமன்ஸ் காட்சியில் ரசிக்க வைத்தும், ஆக்ஷன் காட்சிகளில் வியக்க வைத்தும் படத்திற்கு சிறப்பு சேர்த்தது.

நிவாஸ் கே பிரசன்னாவின் “நிரா” பாடல் ஏற்கனவே ஹிட் அடித்தாலும், கதையோடு பார்க்கும் போது நம்மை ரசிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை ஓகே.

இண்டெர்வலுக்கு முன் வரும் சண்டை எதிர்பாராத ஒன்றாக அமைந்தாலும் மிகவும் ஷார்ப்பாக அமைந்திருக்கும். தினேஷ் காசியின் ஆக்‌ஷன் மிரட்டல்.

டக்கர் – காதலும் களவும் – (3/5);

Related post